Published : 16 Jul 2019 05:12 PM
Last Updated : 16 Jul 2019 05:12 PM

விமானப்  போக்குவரத்துக்கு வான்வெளியை திறந்த பாகிஸ்தான்: அமெரிக்கா செல்லும் பயண செலவு ரூ. 20 லட்சம் குறையும்

புதுடெல்லி

பாகிஸ்தான் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியை மீண்டும் திறந்து விட்டுள்ளதால் அமெரிக்காவுக்கு செல்லும் விமானத்துக்கான செலவு ரூ.20 லட்சமும், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானத்துக்கான செலவு ரூ. 5 லட்சமும் குறையும் என ஏர் இந்தியா நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி  தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.431 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் இருந்தும் இயக்கப்படும் பயணிகள் விமானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் வான்வெளியை திறந்துவிட்டுள்ளதால் பயணிகள் விமானப் போக்குவரத்து இனிமேல் சுமூகமாக நடைபெறும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களும் சுற்றிக் கொண்டு செல்லாமல் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெருமளவு செலவு குறையும்.

அமெரிக்காவுக்கு ஒருமுறை செல்லும் விமானத்துக்கான செலவு ரூ.20 லட்சம் வரை குறையும். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானத்துக்கான செலவு ரூ. 5 லட்சம் வரை குறையும். விமானத்தின் பயன்பாடு 25 சதவீதம் வரை கூடுதலாகும். இன்று இரவு முதல் பழைய திட்டத்தின்படி விமானங்கள் இயக்கப்படும்.

விமான பயண நேரமும் 90 நிமிடங்கள் வரை குறையும். பாகிஸ்தான் வான்வெளியை தடை செய்திருந்தபோது விமானங்கள் சுற்றிச் செல்வதால் அதற்கு கூடுதலான எரிபொருள் தேவை ஏற்பட்டது. அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கு கூடுதல் எரிபொருள் நிரப்ப வேண்டிய கட்டாயமும் இருந்தது. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் ஜூலை 16-ம் தேதி வரை வியன்னாவில் விமானங்களை நிறுத்தி எரிபொருள் நிரப்பி வந்தோம். தற்போது தடை நீங்கியுள்ளதால் இந்த பிரச்சினை இனி தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x