Published : 16 Jul 2019 12:42 PM
Last Updated : 16 Jul 2019 12:42 PM

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதைத் தவிர சபாநாயகருக்கு வேறு வழியில்லை: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதைத் தவிர சபாநாயகருக்கு வேறு வழியே இல்லை என அவர்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகிய முதல் 10 எம்.எல்.ஏ.,க்களின் மனு மீது இன்று காலை விசாரணை நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதைத் தவிர சபாநாயகருக்கு வேறு வழியே இல்லை. ராஜினாமாவை அவர்கள் தானாகவே கொடுத்துள்ளனரா அல்லது நிர்பந்தத்தின் பேரில் கொடுத்துள்ளனரா என்பதை மட்டுமே சபாநாயகர் ஆராய முடியுமே தவிர மற்றபடி அவர்களது ராஜினாமாவை ஏற்றே ஆக வேண்டும்.

நான் விரும்புவதை செய்வது எனது அடிப்படை உரிமை. அதற்கு சபாநாயகர் முட்டுக்கட்டை போட முடியாது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் கட்சி கொறடா உத்தரவின் மூலம் எம்.எல்.ஏ.,க்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கப்படலாம்.

எனவே ஜூலை 10-ல் ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட வேண்டும். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாக ஆதாரம் ஏதுமில்லை. 10 எம்.எல்.ஏ.,க்களில் இருவர் மீது தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளது" என்று வாதிட்டார்.

அந்த 10 எம்.எல்.ஏ.க்களின் விவரம்:

1. பிரதாப் கவுடா பாட்டீல், 2. ரமேஷ் ஜர்கிஹோலி, 3.பி.சி.பாட்டீல், 4.எஸ்.டி.சோமசேகரா, 5.அர்பெய்ல் சிவராம் ஹெப்பார், 6. மகேஷ் குமத்தல்லி, 7.கே.கோபாலய்யா, 8.ஏ.எச்.விஸ்வநாத், 9.பைராதி பசவராஜ், 10.நாராயண கவுடா ஆகியோரே கர்நாடக ஆளுங்கட்சிக்கு எதிராக முதலில் போர்க்கொடி உயர்த்திய 10 எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்பந்திக்க முடியாது:

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தைக் கேட்ட நீதிபதி ரஞ்சன் கோகோய், "என்னால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் சொல்ல முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x