Published : 15 Jul 2019 12:20 PM
Last Updated : 15 Jul 2019 12:20 PM

சந்திராயன் 2 திட்டம் சரியான நேரத்தில் தள்ளிவைப்பு: டிஆர்டிஓ முன்னாள் விஞ்ஞானி கருத்து

சந்திராயன் 2 ஏவும் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தள்ளிவைப்பு முடிவை இஸ்ரோ விஞ்ஞானிகள் சரியாக நேரத்தில் எடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்த்துள்ளதாக முன்னாள் விஞ்ஞானி ரவி குப்தா தெரிவித்திருக்கிறார். இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை அவர் பாராட்டியும் உள்ளார்.

தள்ளிவைப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு  பேட்டி அளித்த டிஆர்டிஓ (DRDO)முன்னாள் விஞ்ஞானி ரவி குப்தா, "இவ்வளவு பெரிய  திட்டத்தை செயல்படுத்தும்போது இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பே. ஆனால், தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்து சரியான நேரத்தில் விண்கலத்தை ஏவுவதை தள்ளிவைத்தே நமது விஞஞானிகளின் சாதனை என்றே நான் சொல்வேன். ஒருவேளை இதைக் கண்டறியாமல் ஏவியிருந்தால் மிகப் பெரிய சேதம் விளைந்திருக்கும். இனி பிரச்சினையை சரியாகக் கண்டறிந்து இன்னொரு நாளில் சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவார்கள். இத்தகைய மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்துவதில் ஒவ்வொரு நொடியும்கூட மிக முக்கியமானது. அதனால்தான் நாங்கள் கவுன்ட்டவுன் நேரத்தை சில நேரங்களில் 72 மணி நேரம் வரை நீட்டித்து வைக்கிறோம்" என்றார்.

முன்னதாக, சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதையடுத்து, அதிநவீன வசதிகளு டன் ரூ.610 கோடி செலவில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

 இதை விண்ணில் செலுத்த 4 முறை திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அனைத்து விதமான சோதனைகளும் முடிந்தநிலையில், விண்ணில் ஏவப்படுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் இருந்தது. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று (15-ம் தேதி) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.  இந்நிலையில், இன்று அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. 

பின்னர் சந்திராயன் 2 ஏவும் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் குருபிரசாத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x