Published : 14 May 2014 09:43 AM
Last Updated : 14 May 2014 09:43 AM

பெரியாறு அணை நீர்மட்ட உயர்வால் 200 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி: புதிய திட்டங்கள் குறித்து மின் துறை ஆய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதால், தமிழகத்துக்கு இரண்டு மாதங்களுக்கு கூடுதலாக 200 மெகாவாட் அளவுக்கு நீர் மின் உற்பத்தி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையி லுள்ள நீர்வளத்தை நம்பி, குந்தா, பைகாரா, ஆழியாறு, அமராவதி, மேட்டூர், பவானி கட்டளை, பெரியாறு, காடம்பாறை, பாபநாசம் மற்றும் வைகை அணை உள்ளிட்ட இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விவசாயம் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களாகும்.

இவற்றின் மூலம் சராசரியாக 15 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியாகிறது. குறிப்பாக ஜூலை முதல் ஜனவரி வரை, நீர்மின் நிலையங்களில் அதிக அளவாக 17 மில்லியன் யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாசன நீர் மூலம் மின் உற்பத்தி செய்ய, தலா 42 மெகாவாட் திறனில், நான்கு அலகுகள் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 35 மெகாவாட் திறனில் நிறுவப்பட்ட இந்த நிலையங்கள் சமீபத்தில், 42 மெகாவாட் திறன் நிலையங்களாக மாற்றப்பட்டன.

தற்போது முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து, 142 அடியாக உயர்த்துவதற்கு, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. அதேநேரம் கூடுதலாக தேங்கும் 6 அடி நீரை திறந்துவிடும் நாட்களில், பெரியாறு நீர் மின் நிலையங்கள் மூலம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக மின் துறை நீர் மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே 136 அடி உயரத்தில் நீரை தேக்கி வைத்து, அதனை நீர்ப்பாசனத்துக்கு திறந்து விடுவதன் மூலம், ஏழு மாதங்களுக்கு சுமார் 200 நாட்கள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதில் நான்கு மாதங்கள் தினமும் 25 லட்சம் யூனிட்கள் வரையிலும், மற்ற மூன்று மாதங்கள் தினமும் 20 லட்சம் யூனிட்கள் வரையிலும் மின்சாரம் உற்பத்தியாகும்.

தற்போது கூடுதலாக 6 அடி உயரத்துக்கு நீர் தேக்கி வைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதால், கூடுதலாக 2 மாதங்களுக்கு குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நீர் மின் உற்பத்தி அதிகமாக கிடைக்கும். இந்த மாதங்களில் காற்றாலை மின்சார உற்பத்தி குறைவாக இருப்பதால், முல்லைப் பெரியாறு மூலம் கிடைக்கும் கூடுதல் மின்சாரம், தமிழக மின் தட்டுப்பாட்டை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.

இதுதவிர, புதிய மின் அலகு களும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி, தென் மேற்கு பருவ மழை காலத்தில் அதிகப்படியான நீர் தேங்கினால் அந்த நீரை, நீலகிரி மலைப்பக்கம் திருப்பி, குந்தா மற்றும் சில்லஹெல்லா நீரேற்று திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியும். இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x