Published : 20 Jul 2015 05:16 PM
Last Updated : 20 Jul 2015 05:16 PM

கங்கையைச் சுத்தப்படுத்த இஸ்ரேல் உதவும்

பாதுகாப்புத் துறையில், நமக்கு மிகப்பெரும் கூட்டாளியாக விளங்கும் இஸ்ரேல், நிபுணத்துவம் வாய்ந்த அதன் நீர் மேலாண்மைத் திட்டத்தை, இந்தியாவில் செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. அத்தோடு கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்திலும் உதவுவதாகக் கூறியுள்ளது.

இஸ்ரேலின் நீர் மேலாண்மை, சுத்திகரிப்பு, மறுசுழற்சித் திட்டங்கள் உலகப் புகழ் பெற்றவை. வறட்சியின் காரணமாக ஏராளமான நாடுகளின் தண்ணீர் நெருக்கடியைப் போக்கியவை. இஸ்ரேலின் நீர் மேலாண்மைத்திட்டம், கழிவு நீரை, நீர்ப்பாசனத்துக்காகத் திரும்பப் பயன்படுத்தலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீடுகளின் கழிவுநீரில் 80 சதவீத நீர், விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவுக்கு நிபுணர்கள் வருகை

இஸ்ரேல் அதிகாரிகள் நதிநீர் மேலாண்மைத் திட்டங்களோடு, நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்புத் திட்டங்களின் தலைவர் உமா பாரதியைச் சந்திக்கின்றனர். இச்சந்திப்பில் தண்ணீர்ப் பாதுகாப்புத் திட்டங்களோடு, கங்கையைத் தூய்மைப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும்.

இஸ்ரேலில் இருந்து ஆகஸ்டில் வரும் நிபுணர்கள் குழு, கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் இது குறித்துப் பேசினார் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மன்.

தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று வெங்கைய நாயுடுவுக்கு அழைப்பு விடுத்த டேனியல், நகர்ப்புறங்களின் தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் சவாலைச் சந்திக்க, தாம் உதவுவதாக உறுதியளித்தார். இத்திட்டம் உருப்பெறுவது ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் அம்ருத் (அடல் நகர உருமாற்றம் மற்றும் புனரமைப்புத் திட்டம்) ஆகிய திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய டேனியல், அக்டோபரில் நடக்கும் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளுமாறும் வெங்கைய்ய நாயுடுவுக்கு அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல் தூதரக அதிகாரி, இது குறித்து 'தி இந்து'விடம் கூறியது:

"நாடு முழுவதும் தண்ணீரைக் கணிசமாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க, இஸ்ரேல் சில கருத்துகளை முன்மொழிந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான தண்ணீர்ப் பிரச்சனை இருக்கிறது. எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் எங்கள் நிபுணர் குழு தீர்வு காணும். தேசிய அளவிலான நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க அரசுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்படி, வலியுறுத்துகிறோம்

இஸ்ரேலின் தண்ணீர் சுத்திகரிப்பு முறை உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தியாவின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆர்வமாக உள்ளோம் " என்றார்.

ஏற்கனவே, இந்தியாவும் இஸ்ரேலும், விவசாயிகளுக்கான கூட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் 28 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குறைவான நீர்ப்பாசனத்தில், எவ்வாறு பயனுள்ள விவசாயத்தை மேற்கொள்வது என விவசாயிகளுக்கு வழிகாட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x