

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், வரதய்யபாளையம் அருகே உள்ள சிட்டி பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அதன்படி, ‘டாப்ளட்ஸ் இந்தியா’ (டிஐஎல்) மருந்து உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 8.30 மணியளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. இதில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
மீட்புப் பணியின்போது 3 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக தடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குவதுடன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்பதாக டிஐஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.