

ஸ்மிருதி இரானி | பிரகாஷ் ஜவடேகர் | ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் | தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: பாஜக தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் 4-வது முறையாக கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தர்மேந்திர பிரதான் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது 5-வது கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்று உள்ளார்.
ஸ்மிருதி இரானி (2014- 16): கடந்த மே 2014-ல் பாஜக அரசு பதவியேற்றபோது ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். அந்த நேரத்தில், கல்வி தொடர்பான கொள்கைகளுக்கு இந்த அமைச்சகமே பொறுப்பாக இருந்தது.
2020-ல் கல்வி அமைச்சகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. அவரது பதவிக் காலத்தின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாக, முந்தைய காங்கிரஸ் அரசால் 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் 4 ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை வரைவு செய்யும் பணியை தொடங்கிய இரானி, 2015-ல் தேசிய நிறுவன தரவரிசைச் சட்டத்தையும் (என்ஐஆர்எப்) அறிமுகப்படுத்தினார்.
எனினும், 2016-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டது சர்ச்சையானது. அதே ஆண்டில் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரமும் விமர்சனத்துக்குள்ளானது.
பிரகாஷ் ஜவடேகர் (2016- 19): 2016-ல் ஸ்மிருதி இரானி ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு வழங்கப்பட்டது. அவரது பதவிக்காலத்தின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று 2017-ம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டம் இயற்றப்பட்டது.
அதே ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிறுவப்பட்டது. எனினும் 2018-ல் 10 (கணிதம்) மற்றும் 12-ம் வகுப்பு (பொருளாதாரம்) வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொக்ரியால் (2019 - 21): கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து, ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். அவரது பதவிக்காலத்தின் மிகப்பெரிய சாதனையாக, தேசிய கல்விக் கொள்கை 2020 அங்கீகரிக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட சுமார் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் பாதி இடங்களுக்கு நிரந்தர துணைவேந்தர்கள் இல்லை.
அதேபோல், 5 ஐஐடி.க்களும் முழுநேர இயக்குநர்கள் இன்றி செயல்பட்டன. ரமேஷ் பொக்ரியாலுக்கு மே 2021-ல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நலக்குறைவை காரணம் காட்டி 2021, ஜூலை 21-ல் பதவி விலகினார்.
தர்மேந்திர பிரதான் (2021- 26): ரமேஷ் பொக்ரியால் பதவி விலகியதைத் தொடர்ந்து, 2021-ல் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சரானார். அவர் சுமார் 5 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார். இதன் மூலம் என்டிஏ ஆட்சியின் கீழ் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒரே கல்வி அமைச்சர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதில் தர்மேந்திர பிரதான் கவனம் செலுத்தினார். இருப்பினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, முக்கியமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போன்றவற்றுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்ததால் நேற்று முன்தினம் பதவி விலகினார்.