Last Updated : 04 Jul, 2015 09:22 AM

 

Published : 04 Jul 2015 09:22 AM
Last Updated : 04 Jul 2015 09:22 AM

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் 20 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வீடுகளை இழக்கும் அபாயம்: உலகளாவிய‌ ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு

கர்நாடகத்தில் மூடப்பட்டுள்ள கோலார் தங்க சுரங்கம் உலக ளாவிய‌ ஒப்பந்தம் மூலம் மீண்டும் திறக்கப்பட்டால் 20 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வீடுகளை இழந்து, லட்சக் கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும். எனவே மத்திய மாநில அரசுகள் கோலார் தங்கவயல் தமிழர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் 1880-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜான் டெய்லர் என்பவரால் தங்க சுரங்கம் அமைக்கப்பட்டது.

இதில் பணியாற்றுவத‌ற்காக வேலூர், விழுப்புரம், திருவண்ணா மலை,சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து லட்சக் கணக்கானோர் தொழிலாளிகளாக அழைத்து வர‌ப்பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பொரு ளாதார முன்னேற்ற‌த்துக்கும் முதுகெலும்பாக திகழ்ந்த தங்க வயல் 1956-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

கோலார் தங்கசுரங்கத்தில் கோடிக்கணக்கான டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு, அப்பகுதி செல்வ செழிப்பாக மாறிய‌தால் 'குட்டி இங்கிலாந்து' என அழைக்கப்பட்டது. 100 ஆண்டு களுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்ட தங்கசுரங்கம் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி 2001-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் வேலை இழந்த 2 ஆயிரத்து 812 தொழி லாளர்களுக்கு முழுமை யான நிவாரணத் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்க வில்லை. போதிய அடிப்படை வசதி களின்றி வறுமையில் வாடும் தங்கவயல் தமிழர்கள் தற்போது வீடுகளையும் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கர்நாடக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உயிரைக் கொடுத்து உழைத்த தங்கவயல் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கக் கோரியும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் கோலார் தங்கவயலில் தமிழ் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உலகளாவிய ஒப்பந்தத்தை எதிர்த்தும், வீடுகளை காலி செய்ய மறுத்தும் தங்க சுரங்க தொழில் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

தங்கவயல் அழியும்

இது தொடர்பாக கோலார் தங்கவயல் மக்கள் பாதுகாப்பு குழுவின் தலைவர் தாஸ் சின்னசவரி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுரங்கத்தை மூடியதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, “மத்திய அரசு கோலார் தங்கவயலை முழுவதுமாக மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு 16 தொழிற் சங்கங்களும் ஒன்றாக இணைந்து, உலகளாவிய ஒப்பந்தம் மூலமாக சுரங்கத்தை நடத்தலாம்''என உத்தர விட்டது.

இதையடுத்து மத்திய அரசு தங்கசுரங்கத்தை உலகளாவிய ஒப்பந்தம் மூலம் நடத்த அனுமதி அளித்தது. ஏலம் எடுக்கும் நிறுவனம் ஆழமாக சுரங்கம் வெட்டியோ, திறந்த வெளி சுரங்கம் அமைத்தோ தங்கத்தை எடுக்க ஆலோசனை வழங்கியது. முன்னதாக அங்குள்ள தங்கவயல், 20 ஆயிரம் வீடுகள், 100 ஆலயங்கள், 100 கோயில்கள், 5 மசூதிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய ரூ.62 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையை வழங்க வில்லை.

இந்நிலையில் தங்கவயலை ஏலம் எடுக்க வந்துள்ள நிறுவ னங்கள் திறந்தவெளி சுரங்கம் அமைக்க முன்வந்துள்ளன. திறந்தவெளி சுரங்கம் அமைக் கப்படும் பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்பட்டால் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முழுவதுமாக தோண்டப்படும். இதனால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடின்றி தவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே மத்திய அரசு உலக ளாவிய ஒப்பந்தத்தை ரத்து செய்து, திறந்தவெளி சுரங்கம் அமைக்க தடை விதிக்க‌ வேண்டும். ஒருவேளை சர்வதேச நிறுவனங்கள் தங்கவயலை வாங்கினால், இங்கு வாழும் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

எதிர்கால கர்நாடக வரைபடத்தில் தமிழர்கள் வாழ்ந்த தங்கவயல் என்ற நகரம் தடம் தெரியாமல் அழிந்து போகும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் நலனுக்கும் உழைத்த தங்கவயல் மக்களை காப்பாற்ற மத்திய அரசும், கர்நாடக அரசும் திறந்தவெளி சுரங்க திட்டத் தையும், வீடு காலி செய்ய வைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும்''என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x