Last Updated : 26 Jul, 2015 10:53 AM

 

Published : 26 Jul 2015 10:53 AM
Last Updated : 26 Jul 2015 10:53 AM

அமர்நாத் யாத்திரை பாதையில் கனமழைக்கு 2 குழந்தை உட்பட 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை செல்வதற்கான பல்தல் அடிவார முகாம் பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாயினர். மேலும் நிலச்சரிவு காரணமாக அந்த பாதை சேதமடைந்திருப்பதால் 1,500 பக்தர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பல்வேறு அடிவார முகாம்களிலிருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இதில் பல்தல் வழிப் பாதை மிகவும் குறைவான தூரம் (16 கி.மீ.) கொண்டது. இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் கனமழை பெய்தது. இதனால் பல்தல் நுழைவு வாயில் மற்றும் ரங்கமோர் இடையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது.

மேலும் அடிவார முகாம்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் உடனடி நடவடிக்கைக் குழு அப்பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 780 பொதுமக்கள் மற்றும் அடிவார முகாமில் தங்கியிருந்த 1,500 பக்தர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பிரிஜேஷ் பாண்டே கூறும்போது, “வெள்ளம் காரணமாக இறந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா (13) மற்றும் விக்ரம் (12) மற்றும் டெல்லியைச் சேர்ந்த தீபக் குமார் (35 ஆகிய 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் யாத்ரீகர்கள் இல்லை என்றும் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் 19 பேர் காயமடைந்தனர். காணாமல் போன 2 பேரை தேடி வருகிறோம்” என்றார்.

எனினும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மிகவும் கடினமான பஹல்காம் பாதையில் (45 கி.மீ.) அமர்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்தல் முகாமிலிருந்து 1,000 யாத்ரீகர்களை அமர்நாத் கோயிலுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x