Published : 15 Jun 2015 01:39 PM
Last Updated : 15 Jun 2015 01:39 PM

பாஜக உட்பூசலை காட்டுகிறதா லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்?

பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ட்வீட், பாரதிய ஜனதா கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாக உணர்த்துவதாக கூறப்படுகிறது.

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் >லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய சர்ச்சை அடங்குவதற்குள், கீர்த்தி ஆசாத் ட்வீட் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கீர்த்தி ஆசாத் அவரது ட்வீட்டில், "கட்சியில் உள் வேலை பார்க்கும் ஒருவரே சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்துக்கும் லலித் மோடி குடும்பத்துக்கும் உள்ள நெருக்கம் குறித்தும், லலித் விசா விவகாரம் தொடர்பாக அமைச்சரின் பரிந்துரை குறித்தும் தகவல் பரப்பியிருக்கிறார். பசும் புல்லில் பதுங்கியிருக்கும் அந்த பாம்பு யார் என்று கண்டுபிடியுங்கள். கட்சியின் ஒரு நபரும் ஒரு ஊடக நபருமே சுஷ்மாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். (#BJPs #AsteenKaSaanp & #Arnab conspire against BJP leaders. ) ஆனால், நான் சுஷ்மாவை ஆதரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ட்வீட்டை, மற்றொரு ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாகவே கீர்த்தி பதிந்துள்ளார். அதாவது, மாதவ் என்ற பெயரில் @mahesh10816 என்ற ட்விட்டர் ஹேண்டிலில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு ட்வீட்டை ஷேர் செய்து அதற்கு விளக்கமாகவே கீர்த்தி ஆசாத் பதிந்திருக்கிறார்.

@mahesh10816 ட்விட்டர் பக்கத்தில், "டைம்ஸ் நவ் சேனலில் அர்னப் கோஸ்வாமி தவறான செய்தியை பகிர அனுமதித்ததன் மூலம் நிதின் கட்கரி பெரும் தவறை இழைத்துவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டை ஷேர் செய்து கீர்த்தி தனது கருத்தை பதிந்துள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி ஆசாத் குறிப்பிட்டுள்ள பாஜக தலைவர் யாராக இருக்கலாம் என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் சூடு பிடித்திருக்கிறது.

ஏற்கெனவே பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

இந்நிலையில், கீர்த்தி ஆசாதும் சுஷ்மாவுக்கு ஆதரவாக பேசியிருப்பது பாஜகவுக்குள் உட்பூசல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வதாகவே கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x