Published : 22 Jun 2015 08:02 AM
Last Updated : 22 Jun 2015 08:02 AM

இந்தியாவின் கின்னஸ் சாதனைகள்

டெல்லி ராஜ பாதையில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் கின்னஸ் உலக சாதனை புத்த கத்தில் இடம்பெற்றது.

இந்தியர்களால் இதற்கு முன்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:

சுத்தம்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டன்பள்ளியில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கைகழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 1,200 பேர் கலந்து கொண்டனர். இந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 100 நாட்களில் 20 ஆயிரம் கழிப்பறைகளை கட்டுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

மலையேற்றம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கிர்னர் மலையின் மீது அதிகப்படியானவர்கள் (2,122) ஓடினர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

பரதநாட்டியம்

மகாராஷ்டிர மாநிலம் கொல்ஹாபூரில் கடந்த ஜனவரி 10-ம் தேதி நடைபெற்ற பரத நாட்டியம் நடன நிகழ்ச்சியில் 2,100 பேர் கலந்துகொண்டு உலக சாதனை படைத்தனர். தபஸ்யா சித்தி கலா அகாடெமி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பெண்கள் ஆவர்.

மகாத்மா காந்திகள்

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சவுடாம்பிகா கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளைச் சேர்ந்த 2,955 மாணவர்கள் மகாத்மா காந்தி உடை அணிந்து உலக சாதனை படைத்தனர். காந்தியடிகளின் வாழ்க்கை முறை மற்றும் அவரது போதனைகளை போற்றும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

நடனம்

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மும்பை கட்கோபரில் நடைபெற்ற ஒரு டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4,428 மாணவர்கள் கலந்துகொண்டு நடனம் ஆடி உலக சாதனை படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x