Last Updated : 26 Jun, 2015 04:19 PM

 

Published : 26 Jun 2015 04:19 PM
Last Updated : 26 Jun 2015 04:19 PM

பிரியங்கா, ராபர்ட் வதேராவை சந்தித்ததாக லலித் மோடி ட்வீட்: காங்.- பாஜக மோதல்

லண்டனில் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேராவை சந்தித்தகாக லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட காங்கிரஸ் தலைவர் சோனியா இது குறித்து பதில் கூறியே ஆக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ்-வசுந்தரா ராஜே-லலித் மோடி விவகாரம் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் லலித் மோடி, லண்டனில் பிரியங்கா காந்தியையும், ராபர்ட் வதேராவையும் தனித்தனியாக சந்தித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து பாஜக-வும் காங்கிரஸும் மீண்டும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளன.

இந்த ட்விட்டர் பதிவுகளை அடுத்து இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த எதிர்க்கட்சியோ, “பொய்களின் மூலம் சிறிய மோடி பெரிய மோடிக்கு உதவும் விவகாரம் இது” என்று சாடியுள்ளது.

இதனையடுத்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, "இன்றைய தினத்தின் மிகப்பெரிய வெளிப்பாடு என்னவெனில் லலித் மோடி, காந்தி குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார். நேற்றுதான் ராபர்ட் வதேராவையும் பிரியங்காவையும் சந்தித்துள்ளார், அவரை ஏன் இவர்கள் சந்திக்க வேண்டும்?

இப்போது என்னால் தெளிவாகக் கூறமுடிகிறது. இந்த விவகாரமே லலித் மோடிக்கும்-காந்தி குடும்பத்தினருக்கும் தொடர்புடையதாகும். ஏன் இத்தனையாண்டுகளாக லலித் மோடியுடன் தொடர்பில் காந்தி குடும்பத்தினர் இருக்க வேண்டும் என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்.

பிரிட்டன் லலித் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த தயாராக இருந்தும், லலித் மோடி இங்கு வருவதை விரும்பாதவர்கள் யார் என்பது புரியவருகிறது.

அவர்களைத் தடுத்தது யார்? காந்தி குடும்பமே. நம்பர் 10, ஜன்பத்திலேயே இந்த விவகாரம் தொடங்கி முடிந்தும் உள்ளது” என்று கடுமையாக சாட, பதிலுக்கு காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா, “லலித் மோடியுடன், பிரியங்காவோ, ராபர்ட் வதேராவோ உரையாடவில்லை என்பதை நான் முழுப் பொறுப்புடன் கூற முடியும். உணவு விடுதியில் ஒருவரை சந்திப்பது பெரிய குற்றமல்ல. பொய்கள் மூலம் சிறிய மோடி, பெரிய மோடிக்கு உதவி புரிகிறார்.

பிரச்சினையை திசைதிருப்ப பாஜக செய்யும் முயற்சியே இது. உண்மையான விவகாரங்கள் குறித்து அரசு பேச வேண்டும் அதனை விடுத்து லலித் மோடி விவகாரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x