Last Updated : 11 Jun, 2015 08:08 PM

 

Published : 11 Jun 2015 08:08 PM
Last Updated : 11 Jun 2015 08:08 PM

இனி இல்லை ‘டாக்டர் கையெழுத்து’: மருந்துகளின் பெயர்களை பெரிய எழுத்தில் எழுத அறிவுறுத்தல்

மோசமான கையெழுத்தை ‘டாக்டர் கையெழுத்து’ என்று கேலி செய்யும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆனால் அது கேலிக்குரிய விஷயமல்ல, கவனிக்க வேண்டிய எச்சரிக்கையான விஷயம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கருதுகிறது.

மருத்துவர்கள் மருந்துகள் பரிந்துரை சீட்டில் மருந்தின் பெயர்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் (Upper case) எழுதுவது ஒரு விதிமுறையாக மாறலாம் என்று சுகாதார அமைச்சகம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.

ஏனெனில் பலதருணங்களில் டாக்டர் எழுதிய மருந்தின் பெயர்களில் மருந்துக் கடைப் பணியாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.

இதனால் மருந்துகளின் வணிகப்பெயரை மருந்துச்சீட்டில் பெரிய எழுத்துக்களில் எழுதுவதோடு, அந்த மருந்து எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்ற அதன் வகையினத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு கட்டாய நடைமுறையாக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக ஆண்டி பயாடிக்குகளில் ‘நோவோமாக்ஸ்’ என்ற வணிகப்பெயரை மருத்துவ எழுதுகிறார் என்றால் NOVOMOX என்று கேப்பிடல் எழுத்துகளில் குறிபிடுவதோடு, அது அமாக்சிஸிலின் என்ற வகைமையைச் சேர்ந்தது என்பதால் அதன் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆனால், கேப்பிடல் எழுத்துகளில் எழுதாத மருத்துவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ எதுவும் கிடையாது என்று சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் எம்.பி.க்கள் பலர் மருத்துவர்களின் கையெழுத்துக் குழப்பத்தினால் ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன, சில நேரங்களில் தவறான மருந்தினால் மரணம் கூட ஏற்படுவதாக கவலையுடன் தெரிவிக்க நட்டா அதனை ஏற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' விதிமுறைகளின் கீழ் அரசிதழில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

மத்திய அரசின் இந்த புதிய அறிவுறுத்தல் பற்றி இந்திய மருத்துவக் கழகத்தின் டாக்டர் கே.கே.அகர்வால் கூறும்போது, “அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 1 லட்சம் மருந்துச் சீட்டுப் பிழைகள் நடக்கின்றன. இந்தியாவில் இது குறித்த தரவுகள் இல்லை. தவிர இணையம் மூலமாக‌ மருத்துவப் பதிவேடுளை நிர்வகிப்பதைக் காட்டிலும் இது மிகவும் செலவு குறைந்த நடைமுறையும் ஆகும்.

இதனை மருத்துவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்ச காலம் ஆகலாம்.ஆனால் இதனைப் பழக்கத்தில் கொண்டு வர மருத்துவர்களுக்கு சிறிது காலம் பிடிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x