Last Updated : 14 Jun, 2015 11:59 AM

 

Published : 14 Jun 2015 11:59 AM
Last Updated : 14 Jun 2015 11:59 AM

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி? - ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவு தட்டில் பல்லி இருந்ததாக வெளியான தகவலை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் கூறியதாவது:

பயணியின் உணவு தட்டில் பல்லி இருந்ததாக வெளியான தகவல் தவறானது. இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறவில்லை. அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இதுதொடர்பாக டெல்லியிலோ, லண்டனிலோ புகார் பதிவாகவில்லை. பயணத்தின்போதும் யாரும் புகார் கூறவில்லை.

இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தபோதிலும் இதுவரை, குறிப்பிட்ட விமானத்தின் ஊழியர்களோ, பயணிகளோ யாரும் புகார் அளிக்கவில்லை. இது வெறும் புரளிதான். ட்விட்டரில் வெளியான ஒரு புகைப்படமே இதற்குக் காரணம். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் மிகச்சிறந்த விருந்தோம்பல் நிறுவனமான தாஜ் குழுமம்தான் ஏர் இந்தியாவுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தின் புகழைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக யாரோ இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமானப் பயணி ஒருவரின் உணவு தட்டில் பல்லி இருப்பது போன்ற படம் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டது. மேலும், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா 111 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x