Last Updated : 29 May, 2014 09:37 AM

 

Published : 29 May 2014 09:37 AM
Last Updated : 29 May 2014 09:37 AM

நரேந்திர மோடி அமைச்சரவையில் அரசியல் வாரிசுகளுக்கு இடமில்லை

மக்களவைத் தேர்தலில் அரசியல் வாரிசுகளுக்கு பாஜக வாய்ப்பு அளித்திருந்தாலும் அமைச்சரவை யில் அவர்களுக்கு இடம் அளிக்க வில்லை.

மற்ற கட்சிகளை போலவே, பாஜகவிலும் அரசியல் வாரிசுகள் பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பி டத்தகுந்தவர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் (40). இவர் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்ற போதிலும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 அமைச்சர் கள் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நிஹால்சந்த் மேக்வாலுக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

இதுபோல் இமாச்சலப்பிரதேச மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் தூமலின் 39 வயது மகன் அனுராக் தாக்கூருக்கும் (அமீர்பூர்)அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து அமைச்சரவையில் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

மேனகா காந்தியின் மகனான 34 வயது வருண் காந்திக்கும் அமைச்சரவையில் இடமில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனான வருண், சோனியாவுக்கு எதிராக அரசியல் செய்ய உதவியாக இருக்கிறார்.

கடந்தமுறை பிலிபித் எம்.பி.யாக இருந்த வருண், இந்த முறை அமேதிக்கு அருகில் உள்ள சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் இவரது தாய் மேனகாவுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

பாஜகவில் முக்கியத் தலைவர் களில் ஒருவராக இருந்த பிரமோத் மஹாஜனின் மகள் பூனம் மஹாஜன் மும்பை தெற்கு தொகு தியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரும் இரண்டு முறை எம்.பி.யுமான பிரியா தத்தை தோற்கடித்தார். அவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட வில்லை.

தனிக்கட்சி நடத்தி, பிறகு முலாயமின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து, பின்னர் பாஜகவுக்கு திரும்பியவர் கல்யாண்சிங். இவரது மகன் ரகுவீர்சிங்குக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. சத்தீஸ்கரில் 3-வது முறையாக முதல்வராக இருக்கும் ராமன் சிங்கின் மகன் அபிஷேக்சிங், டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப்சிங் வர்மாவின் மகன் பிரவேஷ்சிங் வர்மா ஆகியோருக்கும் அமைச்சர வையில் இடமில்லை.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், “அரசியல் தலைவர்களின் வாரிசுக ளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டதே பெரிய விஷயம். அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடமளித்தால், காங்கிரஸ் வளர்க்கும் குடும்ப அரசியலை பாஜகவால் எதிர்க்க முடியாது.

எனினும் முன்னாள் கப்பல்துறை அமைச்சர் வேத்பிரகாஷின் மகன் பியூஷ் கோயல் 25 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவம் பெற்றவர் என்பதாலும், பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூட்டணிக் கட்சியான அகாலி தளத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது” எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x