Published : 06 Jun 2015 08:44 PM
Last Updated : 06 Jun 2015 08:44 PM

இந்தியா-வங்கதேசம் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க எல்லை ஒப்பந்தம் அமல்

இந்தியா, வங்கதேசம் இடையே 41 ஆண்டுகள் இழுபறியாக நீடித்து வந்த எல்லை வரையறை ஒப்பந்தத்தை அமல்படுத்த இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதன் படி இருநாடுகளும் 161 பகுதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 51 பகுதிகளை இந்தியாவிடம் வங்கதேசமும், 111 பகுதிகளை வங்கதேசத்திடம் இந்தியாவும் ஒப்படைத்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றார். அவருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சென்றுள்ளார்.

போர்நினைவிடத்தில் அஞ்சலி

டாக்கா விமான நிலையத்தில் இறங்கிய மோடியை அந்த நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் சென்று வரவேற்றார். அதைத் தொடர்ந்து வங்கதேச ராணுவ வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 1971-ம் ஆண்டு போரில் வங்கதேச விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.

முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனாதான் தற்போதைய வங்கதேச பிரதமராக உள்ளார்.

பேருந்து சேவைகள் தொடக்கம்

இதைத் தொடர்ந்து இந்தியா, வங்கதேசம் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இரண்டு பேருந்து சேவைகளை மோடி, ஷேக் ஹசீனா, மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டாக இணைந்து தொடங்கிவைத்தனர்.

கொல்கத்தா-டாக்கா-அகர்தலா நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவை பயணச்சீட்டை ஹசீனாவிடம் மோடி அளித்தார். இதேபோல டாக்கா-ஷில்லாங்-குவாஹாட்டி பேருந்து சேவைக்கான பயணச்சீட்டை மோடியிடம் ஹசீனா அளித்தார்.

இந்த பேருந்து சேவைகளின் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகியவையும் பயன்பெறும். மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களுக்கு இடையிலான பயண தொலைவு 560 கி.மீட்டராக குறைந்துள்ளது.

இருநாடுகளிடையே ரயில் இணைப்பையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி கப்பல் சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லை ஒப்பந்தம் அமல்

இந்தியா, வங்கதேச எல்லைப் பகுதி சுமார் 4096 கி.மீட்டர் நீளம் கொண்டதாகும். இருநாடுகளுக்கும் இடையே 41 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதுதொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தி எல்லையில் பரஸ்பரம் நிலங்களை விட்டுக் கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 1974-ம் ஆண்டில் எல்லை வரையறை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய, வங்கதேச எல்லை வரையறை ஒப்பந்தத்துக்கு அண்மையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது எல்லை வரையறை ஒப்பந்தத்தை அமல்படுத்த முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்களை இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் இருநாட்டு பிரதமர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். பிரதமர் மோடி கூறியபோது, மிக நீண்டகாலமாக நீடித்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது, இது வரலாற்று சாதனை என்று தெரிவித்தார்.

இதன் படி இந்தியாவுக்கு சாதகமாக 500 ஏக்கர்கள் நிலப்பரப்பும், 10,000 ஏக்கர்கள் வங்கதேசத்திற்கு சாதகமாகவும் கிடைக்கும்.

22 ஒப்பந்தங்கள்

பிரதமர் மோடியின் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 22 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் இந்தியா சார்பில் 4600 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x