

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த 453 நேபாள குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் நேபாள நாட்டினரின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அந்நாட்டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்களில் காவல் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இதில் மோசடி கும்பலின் பிடியில் இருந்த 115 பெண்கள் மற்றும் 338 ஆண்கள் உட்பட மொத்தம் 453 நேபாள குடிமக்கள் மே 29ம் தேதி மீட்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ரூபந்தேஹி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மோசடி வலையமைப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்கள் உட்பட 19 பேரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உத்தர பிரதேச காவல் துறை, இந்திய அரசின் புலனாய்வு முகமைகள் மற்றும் ‘கின் இந்தியா'தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மீட்புப் பணிக்கு உதவிய உத்தர பிரதேச அரசு, காவல் துறை மற்றும் புலனாய்வு முகமைகளுக்கு நேபாள தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள நேபாள குடிமக்கள் போலி வேலை வாய்ப்பு சலுகைகள் மற்றும் சமூக ஊடக ஆசை வார்த்தைகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆள் கடத்தல், உழைப்புச் சுரண்டல் மற்றும் நிதி மோசடிகளில் இருந்து தன் குடிமக்களைப் பாதுகாக்க நேபாள அரசு உறுதியுடன் இருப்பதாக அது வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, மே 29ம் தேதி நேபாளத்தின் மனாங் மாவட்டத்தின் நாசோன் நகராட்சியில் புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் டாக்டர் ராகேஷ் பாண்டே மற்றும் நேசன் நகராட்சி தலைவர் தன்பகதூர் குருங் ஆகியோர் இணைந்து இதற்கு அடிக்கல் நாட்டினர்.
திட்ட விவரம்: இந்திய அரசின் சுமார் 56 மில்லியன் நேபாள ரூபாய் நிதி உதவியுடன், ‘உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்' (HICDP) கீழ் இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த புதிய வசதி சிறந்த சுகாதார சேவைகளைப் பெற உதவும் என்று உள்ளூர் பங்குதாரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நெருங்கிய அண்டை நாடுகளான இந்தியா மற்றும் நேபாளத்தின் இந்த கூட்டு முயற்சி, நேபாளத்தின் உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவைப்பிரதிபலிக்கிறது.