

| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: தனி சின்னத்தில் போட்டியிட்டு இருக்கலாம் என மதிமுக நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த கருத்தையே துரை வைகோ பேசியாதாக, வைகோ விளக்கமளித்துள்ளார்.
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் உறுதியாக இருந்து பரப்புரை செய்தேன். திமுக வாக்குகளால் தான் இரண்டு தொகுதிகளில் மதிமுக வெற்றிபெற்றது.
திமுக வெற்றிக்கும் மதிமுக உதவியது. தேமுதிக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் அதிக தொகுதி கொடுத்தார்கள்.
மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் என்ற நிலை எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சங்கடம் ஏற்பட்டது. தனி சின்னத்தில் போட்டியிட்டு இருக்கலாம் என ஆதங்கத்தில் கட்சியில் உள்ள நிர்வாகிகள் இருந்தார்கள். அதே ஆதங்கத்தை தான் துரை வைகோ பேசியுள்ளார்.
திமுக ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல் தவெகவுக்கு சென்றுவிட்டது. காங்கிரஸ் ராஜ்யசபாவில் இடம் வாங்கிவிட்டு தற்பொழுது மந்திரி சபையிலும் இடம் வாங்கி விட்டார்கள். அவர்களுடனும், விசிகவுடனும் எங்களை எப்படி ஒப்பிட்டு பேச முடியும்.
மேலும், தற்போது வரையிலும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம் பொதுக்குழுவில் பேசப்பட்டு அதற்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய வைகோ, “கர்நாடகா அரசு தமிழக மக்களை வஞ்சிக்க வேண்டாம், மேகேதாட்டு அணை கட்டினால் தமிழகத்தில் ஐந்து கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது.
தமிழக மக்களை வஞ்சிக்கும் சூழலை ஏற்படுத்த கூடாது. அணை கட்டும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டால் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்.
தமிழக முதல்வர் சட்டத்தின் மூலம் தடுக்கவும் நினைக்கலாம். தமிழக அரசு ஒருநாள் கடையடைப்பு செய்தால் கூட தமிழகம் ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறது என்ற எண்ணம் உருவாகும். இதற்கு முன் இருந்த ஆளுநர்களை விட தற்போது இருக்கும் ஆளுநர் மோசமாக இருக்கிறார்.
திருவள்ளுவர் சாதி, மதம் எதுவும் இல்லாதவர். அவருக்கு காவி உடை அணிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.