Published : 12 Jun 2015 12:49 PM
Last Updated : 12 Jun 2015 12:49 PM

யோகா தினத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு; கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிருப்தி

சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புகள் சில இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், யோகா தினம் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கடைபிடிக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவதால் கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

யோகா மதம் சார்ந்தது அல்ல என்று அரசு பல முறை வலியுறுத்தியும்கூட சில இஸ்லாம் அமைப்புகள் பள்ளிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கை சில முஸ்லிம் அமைப்புப் பிரதிநிகள் சந்தித்தனர்.

மஜ்லிஸ் உலேமா-இ-ஹிந்த் (உ.பி.) ஜமாத் உலேமா-இ-ஹிந்த் (டெல்லி), அனைத்திந்திய ஜமாத்-இ-சல்மானி பி, ஜமாத் ஹஃபாஸ் இக்ராம், தவுதி போரா சமூகம், ராஷ்டிரீய சமஸ்கிருத் சன்ஸ்தான் ஆகிய அமைப்பின் பிரதிநிகள் அமைச்சரை சந்தித்தனர்.

அப்போது முஸ்லிம் அமைப்பின் பிரதிநிகள் அமைச்சரிடம் கூறும்போது, "இஸ்லாம் மதத்தின் பெரும்பாலானோர் யோகாவை தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாக கருதவில்லை" என்றனர். மேலும், தொழுகை செய்யும்போது 8 விதமான யோகா முறைகள் அடங்கியிருப்பதாக அமைச்சர் கூறிய கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, "யோகா தினத்தை அணுசரிப்பது கட்டாயம் அல்ல. யோகா மதம் சார்ந்தது அல்ல. இஸ்லாமிய கூட்டமைப்பில் உள்ள 47 நாடுகள் யோகா தினத்துக்கு ஒத்துழைப்பு அளித்திருப்பதே இதற்கு சான்று" என்றார்.

கத்தோலிக்க அமைப்பு அதிருப்தி:

இதற்கிடையில், யோகா தினம் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கடைபிடிக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவதால் கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

கனடாவிலும் எதிர்ப்பு:

கனடாவில் யோகா தினத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வான்கூர் சன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "சர்வதேச யோகா தினமானது கனடாவின் பூர்வக்குடிகள் தினத்தன்று நடைபெறுகிறது. எனவே யோகா தினத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்தேவ் தலைமையில் பயிற்சி:

டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் பயிற்சி அளித்துவருகிறார். இந்த நிகழ்ச்சியில் 35,000 பேர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே யோகா சிடி வழங்கப்பட்டு அதன்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கின்னஸ் புத்தகத்தில் இந்நிகழ்ச்சியை இடம்பெற செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வதேச யோகா தினம் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி தினமும் தனது ட்விட்டரில் ஆசனங்கள் குறித்து தகவல்களை பதிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x