Published : 09 Jun 2015 08:38 AM
Last Updated : 09 Jun 2015 08:38 AM

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: சட்டரீதியான பின்விளைவுகள் என்ன?- சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விளக்கம்

ஆந்திரா - தெலங்கானா இடையே மோதலை உருவாக்கியுள்ள தொலை பேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்து சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறியதாவது:

தெலங்கானா முதல்வர், உள்துறை அமைச்சர், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆகியோ ருக்கு எதிராக பல்வேறு பிரிவு களின் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அனை வருமே அரசு அலுவலர்கள். இவர்கள் மீது ஆளுநர் மற்றும் அரசின் முன் அனுமதி இல்லாமல் போலீஸில் கொடுக்கப்பட்ட புகாரை வழக்காக நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், தாங்கள் பதவி வகிக்கும் தெலங் கானா மாநில எல்லைக்குள் மட்டுமே புகார் குறித்து செயல்பட அதிகார மிருப்பதாகவும் ஆந்திர அரசுக்கு இவ்விஷயத்தில் அதிகாரமில்லை என்றும் இவர்கள் வாதிடமுடியும்.

இரு அரசுகளும் ஒரே தலை நகரை பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். ஒரே ஆளுநர். எனவே சட்டத்தின் எல்லை பிரச்னைகள் புதிய கோணத்தில் காத்து கொண்டிருக்கிறது.

1885-ம் ஆண்டு இந்தியன் டெலிகிராப் சட்டம், பிரிவு 5-ன் கீழ் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு உள்ளது. ஒட்டுக்கேட்பு அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த நெறிமுறைகள் அல்லது வழிகாட்டு தல்கள் 2014 வரை இல்லை. சுதந்திரத்துக்கு பிறகு, வழிகாட்டு தல்களை ஏற்படுத்த எழுந்த கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவும் இல்லை.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது என்பது தனிமனித அந்தரங்கத்தில் தலை யிடுவது என்றும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதால், தனிமனி தனின் வாழ்வுரிமைக்கு எதிரான செயல் என்றும் குற்றம் சாட்டி, உரிய காரணங்களுக்காக அன்றி தொலைபேசி ஒட்டு கேட்கப்படக் கூடாது என PUCL (People Union for Civil Liberties) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு எதிராக 1996-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தேவையான விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வாறு விதிகள் ஏற்படுத்தப்படும் வரை ஒட்டுக் கேட்பதற்கான அதிகாரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களை நீதிமன்றமே வகுத்தது. அதன் பிறகு ஜனவரி 2014-ல் ஒட்டுக் கேட்பதற்கான வழிகாட்டுதல்களை Standard Operating Procedures (SOPs) மத்திய அரசு வகுத்தது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 மற்றும் தகவலை கண்காணித்தல் - இடைமறித்தல் விதிகள் ஆகியவற்றின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி ஒட்டுக்கேட்கும்அதிகாரம் அரசுக்கு மேலும் முறைப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடு களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, குற்றம் புரியத் தூண்டாமல் தடுப்பது ஆகிய நோக்கங்களுக்கு அந்த ஒட்டுக் கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். மேலும், ஒட்டு கேட்பதற்கான ஆரம்ப உத்தரவை அல்லது அனுமதியை மாநில அல்லது மத்திய அரசின் உள்துறை செயலர் மட்டுமே வழங்க முடியும். எந்த வகையான தகவல் பரிமாற்றம் ஒட்டுக்கேட்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட வேண்டும். புதிய வழிகாட்டுதல்படி, குறிப்பிட்ட தொலைபேசி அல்லது அலைபேசியின் சந்தாதாரர் பதிவு செய்துள்ள மாநிலத்தின் உள்துறை செயலர் பிறப்பிக்கும் ஒட்டுக்கேட்பு உத்தரவை, அந்த சந்தாதாரர் ரோமிங்கில் செல்லும் பிற மாநிலங்களும் மதித்து ஒத்து ழைக்க வேண்டும்.

அனுமதியில்லாமல் தொலை பேசி ஒட்டுக்கேட்கப்பட்டால் இந்தியன் டெலிகிராப் சட்டம், பிரிவு 26(பி) ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அரசின் சட்டப்படியான உத்தரவுக்கு ஒத்துழைக்காத தொலைபேசி நிறுவனங்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x