Last Updated : 30 May, 2015 09:01 AM

 

Published : 30 May 2015 09:01 AM
Last Updated : 30 May 2015 09:01 AM

பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க அனுப்பப்பட்டதா?- பஞ்சாப் மாநிலத்தில் பிடிபட்ட புறாவால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், புறா அதன் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்ட முத்திரையுடன் பிடிபட்டுள்ளது.

வெள்ளைப் புறாவொன்று மன்வால் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் என்பவரிடம் பிடிபட்டது. அந்த புறாவின் இறகுகளில் “ஷகர்கால் தாலுகா, நாரோவல் மாவட்டம் என இறகுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், சில எண்களும் உருது எழுத்துகளும் முத்திரையிடப்பட்டிருந்தன.

சந்தேகமடைந்த ரமேஷ் சந்த், அதனை பாமியல் காவல்துறையிடம் ஒப்படைத்தார். அந்தப் புறா உளவு பார்க்க வந்த புறாவாக இருக்கலாம் எனத் தகவல் பரவியது.

இதுதொடர்பாக பதன்கோட் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் கவுசல் கூறும்போது, “இந்த முத்திரை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எப்போதும் எரிச்சலூட்டி வரும் நமது அண்டை தேசத்தை நம்புவதற்கில்லை. எனவே அந்தப் புறாவை பரிசோதித்து வருகிறோம். உளவுத்துறை, எல்லைப்பாதுகாப்புப் படை உட்பட பாதுகாப்பு படையினரை இது தொடர்பாக உஷார் படுத்தியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

குர்தாஸ்புரில் உள்ள மருத்துவமனையில், அந்தப் புறா ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதன் உடலில் எங்கேனும் கேமரா அல்லது வேறு பொருட்கள் உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது. ஆனால், எதுவும் அகப்படவில்லை. புறாவின் இறகுகளில் உள்ள எண்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம், குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் ஒரு காலில் “சிப்’, மற்றொரு காலில் சங்கேத குறியீடு, எண்களுடன் ஒரு சிறு வளையம் ஆகியவற்றுடன் ஒரு புறா பிடிபட்டது. அதன் இறகில், அரபி மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு வல்லூறு சிறு கேமராவுடன் இறந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டது. 2010-ம் ஆண்டு புறா ஒன்று பிடித்து பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x