Published : 28 May 2015 09:53 AM
Last Updated : 28 May 2015 09:53 AM

போபர்ஸ் ஊழல் தொடர்பான பிரணாப் பேட்டிக்கு எதிர்ப்பு: இந்தியா மீது சுவீடன் பத்திரிகை புகார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடனான பேட்டியின்போது, போபர்ஸ் ஊழல் குறித்து அவர் தெரிவித்த கருத்தை வெளியிட வேண்டாம் என்றும் அவ்வாறு வெளியிட்டால் அவரது சுவீடன் பயணம் பாதிக்கப்படும் என்றும் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக சுவீடன் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 31-ம் தேதி அரசு முறைப் பயணமாக சுவீடனுக்கு செல்ல உள்ளார். இதையொட்டி அந்த நாட்டின் 'டாஜென்ஸ் நைஹெட்டர்' நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின்போது, போபர்ஸ் ஆயுத பேரம் குறித்த கேள்விக்கு பிரணாப் அளித்த பதிலில், “போபர்ஸ் ஆயுத பேர வழக்கில் எந்தவொரு நீதிமன்றமும் ஊழல் நடைபெற்றதாக தீர்ப்பு அளிக்கவில்லை. எனவே இதை ஊழல் என்று குறிப்பிட முடியாது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சுவீடன் மற்றும் லாட்வியாவுக்கான இந்திய தூதர் பனாஸ்ரீ போஸ் ஹாரிசன் அந்த நாளிதழுக்கு கடிதம் எழுதி உள்ளார்.அந்தக் கடிதத்தில், “குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடனான பேட்டியின்போது, அதிகாரப்பூர்வ மற்ற வகையில் வாய் தவறி தெரிவித்த கருத்தை அவர் திருத்திக் கொண்ட பிறகும், அதை வெளியிட்டிருப்பது நெறிமுறைகளுக்கும் பத்திரிகை தர்மத்துக்கு எதிரானது. உங்களுடைய இந்த செயலால் இந்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது” என கூறியுள்ளார்.

கருத்தை வெளியிடுவது உரிமை

இதற்கிடையே பேட்டியின்போது பிரணாப் தெரிவித்த கருத்தை வெளியிட எங்களுக்கு உரிமை உள்ளது என அந்த நாளிதழ் நியாயப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த நாளிதழின் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

பிரணாப்பின் பேட்டியை வெளியிட்டதற்காக இந்தியத் தூதர் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரணாப்புக்கு உரிய மரியாதையை அளிக்காமல் நாங்கள் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரணாப்பின் பேட்டி வெளியாவதற்கு முன்னதாக, எங்கள் நாளிதழ் ஆசிரியர் பீட்டர் உலோதர்ஸ்கி உடன் இந்திய தூதர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போபர்ஸ் குறித்து பிரணாப் தெரிவித்த கருத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மீறி வெளியிட்டால் அவரது சுவீடன் பயணம் ரத்தாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். போபர்ஸ் குறித்த கேள்வியைக் கேட்டதும் பிரணாப் எரிச்சலடைந்தார். இந்தக் காலகட்டத்தில் ஊழலை எப்படி தவிர்க்க முடியும். இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரிடம் எந்தெந்த கேள்வியைக் கேட்க வேண்டும், அவரின் எந்தெந்த பதிலை வெளியிட வேண்டும் என்பதற்கு அந்த நாட்டின் பிரதிநிதி கட்டுப்பாடு விதிக்க முயற்சிப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

150 ஆண்டு பத்திரிகை

டாஜென்ஸ் நைஹெட்டர் பத்திரிகை ருடால்ப் வால் என்பவரால்1864-ல் நிறுவப்பட்டது. சிந்தனையாளர்கள் முக்கிய விவகாரங்கள் குறித்த தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் தலமாக இந்த நாளிதழ் விளங்கி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காண்டிநேவியாவின் சிறந்த செய்தி வடிவமைப்புக்கான போட்டியில் டாஜென்ஸ் நைஹெட்டர் முதல் பரிசை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x