Published : 31 May 2014 09:57 AM
Last Updated : 31 May 2014 09:57 AM

டெல்லி - ஆக்ரா இடையே 160 கி.மீ. வேகத்தில் ரயில்: 90 நிமிடத்தில் சென்றடையும்; இந்த ஆண்டில் இயக்கப்படும்

இந்த ஆண்டு இறுதிக்குள், டெல்லி ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் இயக்க ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மும்பை அகமதாபாத் இடையே உயர்த்தப்பட்ட ரயில் பாதையில், மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுவரும் வேளையில், டெல்லி ஆக்ரா இடையே தற்போது பயன்பாட்டில் உள்ள பாதையிலேயே அதிவேக ரயில் இயக்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் ரயில்வே செயல்படுத்த உள்ளது.

இதன்படி டெல்லி ஆக்ரா இடையே ரயில் பாதையை வலுப்படுத்துவது, சில இடங்களில் ரயில்பாதையை ஒட்டி வேலி அமைப்பது, வளைவுகளில் தண்டவாளத்தை வலுவூட்டுவது, சிக்னல்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத் தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் ரயில்வே துறை சார்பில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் தலைமை யில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தில் வாரிய உறுப்பினர்கள், வடக்கு ரயில்வே பொது மேலாளர், டெல்லி, ஆக்ரா கோட்ட மேலாளர் கள், இத்திட்டம் தொடர்பான உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லி ஆக்ரா இடையே 160 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும் வகையில் ரயில்பாதையை தயார் செய்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இந்த ஆண்டு நவம்பருக்குள் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதி முதல் இப்பாதையில் அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்” என்றார்.

டெல்லி ஆக்ரா இடையிலான சுமார் 200 கி.மீ. தூரத்தை கடப்பதற்கு, போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் தற்போது 126 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இந்த ரயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் செல்கிறது. இந்நிலையில் ரயிலின் வேகம் 160 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டால், டெல்லி ஆக்ரா இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களாக குறையும்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார், திட்டப் பணிகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று சந்தித்தார். அதிவேக ரயில் இயக்குவது, மோடியின் முன்னு ரிமைப் பணிகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x