Last Updated : 30 May, 2015 09:13 AM

 

Published : 30 May 2015 09:13 AM
Last Updated : 30 May 2015 09:13 AM

ஐஐடி மெட்ராஸ் விவகாரம்: கருத்துரிமை அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் - ராகுல் காந்தி உறுதி

விமர்சனம், விவாதங்களை அடக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக போராடுவோம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக மெட்ராஸ் ஐஐடி-யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்புக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை பரிந்துரைத்ததன் பேரில், ஐஐடி நிர்வாகம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடைக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “மோடியின் அரசை விமர்சனம் செய்ததற்காக ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? நமக்கு பேச்சுரிமை உள்ளது. விமர்சனம் மற்றும் விவாதத்தை அடக்க மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கு எதிராகவும் நாம் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐஐடி நிர்வாகத்தின் செயலுக்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த மாணவர் அமைப்பின் சில செயல்பாடுகள் விதிமுறைகளை மீறி இருப்பதால், டீன் அந்த அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உயர் கல்வித் துறை செயலாளர் எஸ்.என். மூர்த்தி கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ் ஓர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம் தனது சொந்த விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐஐடி நிர்வாகத்திடம் கருத்தைக் கேட்டது தவிர வேறெதையும் மத்திய அமைச்சகம் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், ஐஐடி நிர்வாகம் தனது சொந்த விதிமுறைகளின்படியே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x