Last Updated : 28 May, 2015 01:20 PM

 

Published : 28 May 2015 01:20 PM
Last Updated : 28 May 2015 01:20 PM

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும்: சாக்‌ஷி மகராஜ்

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்படும் என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அயோத்தியில் ராமர் கோயில் ஒன்று இருந்தது. அக்கோயில் வரும் காலத்தில் திரும்பவும் கட்டப்படும். இது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். 2019-ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.

ராமர் கோயில் கட்டுவது பாஜகவின் திட்டமில்லை. ஆனால் இது எங்களைப் போன்ற சாதுக்களின் திட்டம். ராமர் கோயில் இயக்கத்தின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால் பாஜக மட்டுமே எங்களை ஆதரித்தது.

கோயில் கட்டுமானத்தை பொறுத்தவரை, அங்கு ராமர் சிலை உள்ளது, அது அங்கு தொடர்ந்து இருக்கும். பாபர் மசூதி என்ற பெயரில் ஒரேயொரு செங்கல்லை கூட அங்கு அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

சர்ச்சை பேச்சுகளுக்கு சாக்க்ஷி மகராஜ் பெயர் போனவர். இவர் இம்மாத தொடக்கத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மனநிலை பாதித்தவர் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு முன், இந்துப் பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி விமர்சனத்துக்கு ஆளானார்.

மேலும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x