Published : 25 May 2014 11:11 AM
Last Updated : 26 May 2014 02:25 PM
தேங்காயைப் பார்த்ததும் என்ன தோன்றும்? இளம் தேங்காயாக இருந்தால் மணக்க, மணக்க சட்னி அரைக்கலாம். அதுவே கொப்பரையாக இருந்தால் தேங்காய்ப்பொடி தயாரிக்கலாம். பொதுவாக இப்படித்தானே நினைக்கத் தோன்றும்? ஆனால் வேலூர், வள்ளலாரைச் சேர்ந்த லலிதாவுக்கோ அதைக் கலைபொருளாக மாற்றத் தோன்றியிருக்கிறது. அவரது வீட்டில் அழகு மணப்பெண், அலங்கார மாப்பிள்ளை, ஜப்பானிய பெண், பல வண்ண மீன்கள் என பல வடிவங்களில் காட்சி தருகிறது கொப்பரைத் தேங் காய். உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வின்போது தனக்கு உதித்த யோசனை இது என்கிறார் லலிதா.
“எங்க வீட்டுத் திருமணங்கள்ல கொப்பரைத் தேங்காயைச் சுரண்டி நாகவல்லி உருவம் செய்வோம். ஒருமுறை கொப்பரையைச் சுரண்டும் பிளேடு எனக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கொப்பரைக் காய்களை வைத்து என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி இப்படி வடிவம் கொடுக்கலாம் என்று தோன்றியது. நான் நினைத்ததைவிட மிக அழகாக உருவங்கள் அமைந்துவிட்டன. அதற்குப் பிறகு நான் உருவாக்கப்போகும் வடிவங்களுக்கு ஏற்ப காய்களைத் தேடி வாங்கத் தொடங்கினேன்” என்கிறார் லலிதா.
கைவினைக் கலைகளில் கரைகண்ட பலரும் ஏதாவது ஒரு கலையையாவது முறைப்படி பயின்றிருப்பார்கள். ஆனால் ஓவியம் வரைவது உட்பட எதையுமே யாரிடமும் பயின்றதில்லை இவர்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் வரையறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அப்போ கைக்குக் கிடைத்ததை வைத்து வரைந்தேன். அதை வீடு முழுக்க ஒட்டியும் வைப்பேன். அதோட சரி. திருமணத்துக்குப் பிறகு என் மகள்கள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்ததும் தான் மீண்டும் வரையத் தொடங்கினேன். புடவைகளில் படம் வரைந்து அவற்றில் குந்தன் வொர்க், ஆரி வொர்க் செய்தேன். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு புடவைகளில் சரியாக பெயிண்ட் செய்ய முடியாமல் திணறினேன். அப்புறம் எந்த வண்ணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் லலிதாவுக்கு அவருடைய கணவரும், மகள்களும்தான் முதல் ரசிகர்களாம். இவரது படைப்புகளைப் பாராட்டுவதுடன் எப்படி அவற்றைச் செழுமைப்படுத்தலாம் என்று யோசனையும் தருவார்களாம்.
ஃபேப்ரிக் பெயிண்டில் இவருடைய நேர்த்தி யைப் பார்த்த தோழி ஒருவர், தன் குலதெய்வமான ராதாகிருஷ்ணரை வரைந்து தரச் சொல்லிக் கேட்டி ருக்கிறார். அதைத் தன் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கும் லலிதா, கைவினைக் கலையில் தன் எல்லையை விரிவுபடுத்தும் ஆர்வத்துடன் புதுப்புது முயற்சிகளுக்குக் கலைவடிவம் கொடுத்து வருகிறார்.
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம்.