Last Updated : 12 May, 2015 10:08 AM

 

Published : 12 May 2015 10:08 AM
Last Updated : 12 May 2015 10:08 AM

அமைச்சர் நிதின் கட்கரி விவகாரம்: மாநிலங்களவை 9 முறை ஒத்திவைப்பு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 9 முறை ஒத்திவைக்கப்பட்டது.

கட்கரி குடும்பத்துக்குச் சொந்தமான புர்த்தி சாகர் கர்கானா லிமிடெட் நிறுவனம் மானியத் திட்டங்களுக்கான விதிகளை மீறியுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதற்குப் பொறுப்பேற்று அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் நேற்று எழுப்பியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா அவையில் பேசியபோது, ஊழலை சகித்துக் கொள்ளமாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், நிதின் கட்கரி விவகாரத்தில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கட்கரி அவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: சிஏஜி அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

சிஏஜி அறிக்கையின் தகவல்கள் எனக்கு எதிராக திரித்து வெளியிடப்படுகின்றன. வழக்கமான நடைமுறைகளின்படி சிஏஜி அறிக்கை குறித்து நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆய்வு நடத்தும். அதன்பேரில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அவரின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் 9 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை வரை நடைபெறுகிறது. அடுத்த இரு நாட்களிலும் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்காக காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் மாநிலங்களவையில் ஆஜராக வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x