Last Updated : 10 Apr, 2015 11:59 AM

 

Published : 10 Apr 2015 11:59 AM
Last Updated : 10 Apr 2015 11:59 AM

உலகம் வியந்த இந்திய கடற்படையின் மீட்புப் பணிகள் நிறைவு: ஏமனில் தூதரகம் மூடல்



உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய இந்திய கடற்படையின் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் ஏமனில் இருந்து 960 வெளிநாட்டவர்களும், 4,640 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் போர்ச் சூழலில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் முயற்சியை கடற்படை மற்றும் விமானப் படையின் அபார பங்களிப்புடன் வெளியுறவுத் துறை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக 4,640 இந்தியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் என 5,600 பேர் மீட்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, "ஏமனில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இன்று இரவு திரும்புவார். இத்துடன் அங்கிருக்கும் நமது தூதரகமும் மூடப்படுகிறது" என்றார்.

முன்னதாக இதனையே குறிப்பிட்ட வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன், எஞ்சிய 630 பேரை 3 சிறப்பு விமானங்கள் மூலம் ஏமன் தலைநகர் சனாவிலிருந்து மீட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், "ஏடன் துறைமுகத்தில் வான்வழித் தாக்குதல் தொடங்கிவிட்டது. இதனால் இதற்கு மேற்பட்டு நாம் விமானப் போக்குவரத்தை உபயோகிக்க முடியாது. இதுவரை 18 பிரிவுகளாக வந்த விமானங்கள் மூலம் மட்டும் 2,900 பேர் மீட்கப்பட்டனர்.

கடற்படைப் போர் கப்பல்கள் மூலம் ஏடன், அல்-ஹுதையா, அல்-முக்காலா துறைமுக நகரங்களிலிருந்து மார்ச் 31-ஆம் தேதி முதல் சுமார் 1,670 பேர் மீட்கப்பட்டனர். ஐ.என்.எஸ். சுமித்ராவில் 46 இந்தியர்கள், 303 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 349 பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வந்து சேர்ந்தனர்" என்றார் அவர்.

எகிப்து பெண் பாராட்டு

இந்தியாவால் மீட்கப்பட்ட எகிப்து பெண் அல்யா கபர் முகமது, இந்தியாவின் மீட்புப் பணிகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, "நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமே இந்திய ராணுவம்தான். அவர்கள் எங்களைக் காப்பாற்றியதுடன், நாங்கள் வந்த கப்பல்களில் எங்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் எவ்வாறு நாம் கவனிக் கப்படுவோமோ அந்த அளவுக்கு இந்திய ராணுவத்தினர் எங் களைக் கவனித்துக்கொண்டனர். இந்தியாவின் இந்த உதவி, நிச்சய மாக வரலாற்றில் எழுதப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x