

புதுடெல்லி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்கவும் ‘பி.எம். சூர்ய கர்-முப்த் பிஜிலி யோஜனா' எனப்படும் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2024 பிப்ரவரியில் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 கோடி குடும்பங்களுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. அரசின் இணையதளத்தின்படி, இத்திட்டம் 2027 மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. இதுவரை 68 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 40 லட்சத்து 21,346 குடும்பங்கள் இத்திட்டத்தால் பலன் அடைந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டம், அரசின் சுயசார்பு இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியா 2047 ஆகியவற்றின் முக்கிய தூணாக முன்னிறுத்தப்படுகிறது.
உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் நிலையற்ற தன்மை மற்றும் எரிபொருள் மீதான சார்பு அதிகரித்து வரும் இக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசியப் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு இத்திட்டம் அவசியமானது என அரசு கருதுகிறது. மின்சாரச் செலவு மற்றும் வழக்கமான எரிசக்தி ஆதாரங்களின் மீதான சார்பை இத்திட்டம் குறைக்கிறது.