Last Updated : 10 Apr, 2015 05:21 PM

 

Published : 10 Apr 2015 05:21 PM
Last Updated : 10 Apr 2015 05:21 PM

திரிவேணி சங்கம சாலைக்கு திருவள்ளுவர் பெயர்: அலகாபாத் மாநகராட்சி கூட்டத்தில் பரிசீலனை

உ.பி.யின் அலகாபாத்தில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தின் சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து சிலை அமைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ்சிங் யாதவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

முதல்கட்டமாக சாலைக்கு பெயர் வைப்பது பரிசீலனையில் இருப்பதாக அந்த கோரிக்கையை எழுப்பிய பாஷா சங்கத்திற்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட ஏராளமான தமிழர்கள் நாள்தோறும் வருகின்றனர்.

இதில் யமுனை நதியின் தென்கரை சாலைக்கு, ‘திருவள்ளுவர் மார்கம்’ எனப் பெயரிட்டு அங்கு ஒரு திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும். சுமார் ஆறு கி.மீ நீளமுள்ள அந்த சாலைகளில் மரங்களை நட்டு அதில், திருக்குறளை இந்தி மொழி பெயர்ப்புடன் எழுதி வைக்க வேண்டும் என பாஷா சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்தி அறிஞர் எம்.கோவிந்தராஜன் கடந்த டிசம்பர் 7-ம் தேதி அகிலேஷ்சிங் யாதவிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.

இதை பரிசீலனை செய்த உ.பி. அரசு கோவிந்தராஜனுக்கு ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிட்ட அந்த கடிதத்தில், ’அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தின் தெற்குப்புற சாலைக்கு தமிழ்க்கவி திருவள்ளுவர் சாலை எனும் பெயர் வைப்பது குறித்து அலகாபாத்தின் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து, நகர மன்றத்தின் பரிந்துரை பெற்ற பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தங்கள் விண்ணப்பம் கிடைத்ததில் இருந்து இன்னும் அந்நகரமன்ற பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கோவிந்தராஜன் கூறியதாவது: ''தமிழை கற்றுக் கொண்ட பாஷா சங்கத்தின் மறைந்த பொதுச்செயலாளரும், நிறுவனருமான டாக்டர்.கிருஷ்ணசந்த் கௌடுக்கு திருவள்ளுவர் மீது அதீத ஈடுபாடு வந்தது. இதனால் அவர்தான், முதன் முறையாக திருவள்ளுவர் பெயரையும் அவரது சிலையையும் அலகாபாத்தில் வைப்பதற்கான கோரிக்கையை 1992-ல் வைத்தார். இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தமையால் சிலை வைக்கும் முயற்சி தடைபட்டது.

எனினும், ஒவ்வொரு நிர்வாகக் கூட்டத்திலும் நின்று போன சிலை வைக்கும் முயற்சி தொடர வேண்டும் என வட இந்தியர்கள் வலியுறுத்தி வந்ததை தான் நான் உ.பி முதல்வரிடம் எடுத்துக் கூறி இருந்தேன். இதில் முதல்கட்டமாக அந்த சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பது நல்ல விஷயம். இதை வைத்த பின் அடுத்த கட்டமாக அங்கு சிலை வைக்கவும் வலியுறுத்துவது எளிதாக இருக்கும்'' என தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x