Last Updated : 03 Apr, 2015 09:23 AM

 

Published : 03 Apr 2015 09:23 AM
Last Updated : 03 Apr 2015 09:23 AM

பெங்களூரு பள்ளியில் மாணவி சுட்டுக் கொலை: ரூ.5 ஆயிரத்துக்கு துப்பாக்கி வாங்கியதாக கைது செய்யப்பட்ட ஊழியர் வாக்குமூலம்

பெங்களூருவில் மாணவியை சுட்டுக்கொன்ற பள்ளி ஊழியர், 5 ஆயிரம் ரூபாய்க்கு துப்பாக்கியை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் காடுகோடி யில் உள்ள பிரகதி உறைவிடப் பள்ளியில் தங்கி படித்த 12-ம் வகுப்பு மாணவி கவுதமி (17) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத் தில் படுகாயம் அடைந்த மற்றொரு மாணவி ஸ்ரீஷா அங்குள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலை ஏற்க மறுத்ததால் மாணவிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பள்ளி ஊழியர் மகேஷை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைதான மகேஷ் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கொண்டபயலு கிராமத்தைச் சேர்ந்தவர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் பலர் துப்பாக்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அங்கு நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதால் அவர்கள் மூலம் துப்பாக்கி கிடைத்திருக்குமா என தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில் மகேஷ், “கடந்த இரு ஆண்டுகளாக‌ கவுதமி என்னிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது பிறந்த நாளுக்கு பரிசுப்பொருள் கொடுத்தேன். அதை வாங்க மறுத்த கவுதமி தனது தோழி ஷாவுடன் சேர்ந்து என்னை எல்லோர் முன்னிலையிலும் திட்டினார். மேலும் இது தொடர்பாக பள்ளி தாளாளரிடம் புகார் அளித்தார்.

இதனால் பள்ளி நிர்வாகத்தில் எனக்கு கெட்டபெயர் ஏற் பட்டது. என்னுடைய காதலை ஏற்க மறுத்து, அவமான படுத்திய‌தால் அவரை பழிவாங்க திட்டமிட்டேன். அதனால் கவுதமி ஊருக்கு போவதற்கு முன்பாக சுட்டுக்கொன்றேன். எனக்கு இந்த துப்பாக்கி நக்ஸலைட் மூலம் கிடைக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பரின் மூலம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் வாங்கினேன். சினிமாவில் பயன்படுத்தும் துப்பாக்கி போலவே இருந்ததால் ரூ.5 ஆயிரம் கொடுத்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பள்ளி தாளாளர் கைது

அரசு வலியுறுத்திய பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளி நிர்வாகம் கடைப்பிடிக்காததால் தாளாளர் பிரசாந்த் மற்றும் முதல்வர் சோம் சிங்கை நேற்று கைது செய்தனர்.

இருவரும் பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x