Last Updated : 08 Apr, 2015 03:06 PM

 

Published : 08 Apr 2015 03:06 PM
Last Updated : 08 Apr 2015 03:06 PM

ஏமனில் இருந்து இதுவரை 4,000 இந்தியர்களை மீட்டது கடற்படை; வெளிநாட்டினர் 230 பேர் மீட்பு

போர்ச் சூழல் நிலவும் ஏமனில் இருந்து இதுவரை 4,000 குடிமக்களை மீட்டுள்ள இந்திய கடற்படை, 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டுள்ளது.

ஏமனிலிருந்து சிக்கி தவித்த இந்தியர்கள் பலகட்டமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களையும் மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் ரஹாத் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

ஆபரேஷன் ரஹாத் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை மற்றும் கடற்படையின் உதவியோடு இதுவரை சுமார் 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அந்த துறையின் செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறும்போது, "ஏமனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைப்பவர்கள் நமது இறுதிகட்ட பயணத்தில் இணைய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 700-க்கும் அதிகமானோர் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 600 பேர் மிக மோசமான நிலையில் இருக்கும் சனா பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்கள். பெரும்பாலானோரை மீட்கும் பணி நிறைவுபெற்றது. எஞ்சியவர்களை கடல் போக்குவரத்து வழியாக மீட்டு கொண்டு வரும் பணி சில நாட்களுக்கு தொடரும்" என்றார்.

இந்தியர்களை மட்டுமல்லாமல் 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் உக்ரைன், இராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது அங்கிருக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளில் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவியது.

கடந்த 2006-ல் நடந்த லெபனான் போருக்கு பின்னர் மீட்பு பணிக்காக கடற்படை போர் கப்பல்களை ஈடுப்படுத்தப்படாமல் இந்தியா தவிர்த்து வந்தது. ஆனால் ஏமன் நிலவரத்தில் மீட்பு பணிக்காக பல ஆண்டுகளுக்கு பின்னர் கடற்படை போர் கப்பல் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x