Published : 20 May 2014 12:33 PM
Last Updated : 20 May 2014 12:33 PM

பிரதமராகும் முதல்வரில் முதல்வர் அல்ல மோடி!

எச்.டி.தேவகவுடா... கர்நாடக மாநில முதல்வராக இருந்த இவர் 1996-ல் யாரும் எதிர்பாராத நிலையில் இந்தியப் பிரதமரானார். முதல்வராக இருந்து முதன்முதலில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவரும் இவரே.

எனவே, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நரேந்திர மோடி, மேற்கூறிய பெருமைக்கு உரித்தானவர் அல்ல.

1996 பொதுத்தேர்தலில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சொற்ப இடங்களையே பெற்றபோது, ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அப்போது மேற்குவங்கத்தின் ஜோதிபாசு உள்ளிட்ட பலரது பெயர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் எச்.டி.தேவகவுடாவே இறுதியில் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

மக்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ஆதரவை பெற்றால் ஒருவர் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பிரதமராக முடியும் என்ற அடிப்படையில் கவுடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும் அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர், ஆறு மாதத்துக்குள் மக்களவைக்கோ அல்லது மாநிலங்களவை தொகுதியிலோ போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தேவகவுடா, ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாவதில் ஆர்வம் காட்டினார். அவ்வாறே தேர்வானார்.

ஆனால், நரேந்திர மோடியை பொருத்தவரை அவர் வாரணாசி, வதோதரா ஆகிய இரு மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவர், குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதோடு, வதோதரா, வாரணாசி தொகுதிகளில் ஒரு தொகுதியை துறக்க வேண்டும்.

நாளை (மே 21-ல்) குஜராத் பாஜக சட்டமன்ற குழு கூடி மோடிக்கு பதிலாக ஒரு தலைவரை தேர்வு செய்யும் என தெரிகிறது. அதன் பின்னர் மோடி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்.

இந்திய அரசியல் சட்டத்தின் படி, ஒருவர் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துகொண்டே சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது. தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்ட 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பொறுப்பை அவர் துறக்க வேண்டும். இதே சட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் செல்லுபடியாகும்.

நரசிம்ம ராவ் 1991 தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் ராஜீவ் படுகொலை, நிலைமையை ஒரே இரவில் மாற்றிவிட்டது. காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. சோனியாவை பிரதமராக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அவர் அதனை திட்டவட்டமான மறுத்துவிடவே நரசிம்ம ராவ் பிரதமரானார்.

பின்னர் ஆந்திர மாநிலம் நந்தியால் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x