Last Updated : 26 Apr, 2015 06:20 PM

 

Published : 26 Apr 2015 06:20 PM
Last Updated : 26 Apr 2015 06:20 PM

இந்தியாவில் நிலநடுக்க பலி 62 ஆக அதிகரிப்பு: மத்திய அரசு நிவாரண நிதி அறிவிப்பு

இந்தியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்தது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் எதிரொலித்தது. குறிப்பாக நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.

வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளதாகவும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, "நிலநடுக்கத்தால் பிஹார் மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 44 பேரும் உத்தரப் பிரதேசத்தில் 11 பேரும், மேற்குவங்கத்தில் 2 பேரும் பலியாகி உள்ளனர். பிஹாரில் 133 பேரும், உ.பி.யில் 69 பேரும், மேற்குவங்கத்தில் 35 பேரும் காயமடைந்துள்ளனர்" என்றார்.

அதன்பின், மாலையில் வெளியுறவு அமைச்கம் வெளியிட்ட செய்தியில், பிஹாரில் 46, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தின் 2 மற்றும் ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையிலான தேசிய நெருக்கடி மேலாண்மை மையம் நேற்று கூடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், அமைச்சரவை செயலகம், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

பின்னர், நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

வட இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று புதிதாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பீதி காரணமாக கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவில் தெருக்களில் திரண்டிருந்த பொதுமக்களுக்குபுதிய நிலநடுக்கம் அவர்களை அலறவைத்தது.

நேபாளத்தில் மையம் கொண்டு 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த புதிய நில அதிர்வுகள் மேற்குவங்கம், பிஹார், அசாம், ஜார்க்கண்ட், ஒடிஸா, உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 12.42 மணிக்கு ஏற்பட்டு 30 வினாடிகள் நீடித்தது. இவற்றால் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதும் வரவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து நிவாரண, மீட்பு நடவடிக்கைகள் எப்படி நடக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக கூட்டம் கூட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x