Last Updated : 09 Mar, 2015 12:27 PM

 

Published : 09 Mar 2015 12:27 PM
Last Updated : 09 Mar 2015 12:27 PM

டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு நாகாலாந்து பாணி தண்டனைதான் பொருத்தமானது: சிவசேனா

டெல்லியில் கடந்த 2012-ல் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்க வேண்டுமோ அதைத்தான் நாகாலாந்து மக்கள் பரீத் கானுக்கு கொடுத்திருக்கிறார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "நாகலாந்தில் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடு.

டெல்லியில் கடந்த 2012-ல் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்க வேண்டுமோ, அதைத்தான் நாகாலாந்து மக்கள் பரீத் கானுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

நாகாலாந்து மக்கள் பல ஆண்டு காலமாக வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

ஏற்கெனவே ஊடுருவல் பிரச்சினை இருந்துவந்த நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய நபர் பலாத்காரத்தில் ஈடுபட்டது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியுள்ளது. பொறுமையிழந்த மக்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடு.

சட்டம் தன் கடமையை செய்திருந்தால், மக்கள் அந்த நபரை அடித்து, உதைத்து கொலை செய்திருக்கமாட்டார்கள். ஒரு அப்பாவி பெண் பலாத்காரம் செய்யப்படும்போது சட்டம் - ஒழுங்கு நிலையைப் பற்றிக் கவலைப்படாத அரசு, குற்றம்சாட்டப்பட்டவர் கொலையானபோது மட்டும் சட்டம், ஒழுங்கு பற்றி கவலைப்படுகிறது.

டெல்லி பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்கும் இம்மாதிரியான தண்டனை வழங்குவதே பொருத்தமானதாகும். ஆனால், அவர்கள் சுகமாக திகார் சிறையில் அமர்ந்துகொண்டு சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். டெல்லி வழக்கு விசாரணை நத்தை வேகத்தில் நடந்து வருகிறது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவர் சிறுவன் என்ற போர்வையில் சிறையில் சுகமாக இருக்கிறார். சட்டங்கள் வலுவாக செயல்பட வேண்டும்.

நாகாலாந்து சம்பவத்தில், மக்கள் ஏன் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என்பதன் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து தாலிபன் பாணியில் தாக்குதல் நடத்தியிருப்பதாக விமர்சிக்கக்கூடாது" இவ்வாறு அந்த தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x