Last Updated : 30 Apr, 2014 08:48 AM

 

Published : 30 Apr 2014 08:48 AM
Last Updated : 30 Apr 2014 08:48 AM

உ.பி.யில் கங்கை, கோமதி நதிகளை மையப்படுத்தி பிரச்சாரம்

உத்தரப்பிரதேசத்தில் கங்கை, கோமதி நதிகளை மையமாக வைத்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.

உ.பி.யின் தெய்வீக நகரமான வாரணாசியில் புனித நதியாக கருதப்படும் கங்கை ஓடுகிறது. இங்கு கங்கையில் செய்யப்படும் சடங்குகளுக்காகவே நாட்டின் மூலை முடுக்குகள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் வாரணாசி யின் சாக்கடை நீர் மற்றும் சுற்றுப்பகுதி தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் கங்கை அசுத்தம் அடைந்து வருகிறது.

இதை சுத்தம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல கோடி ரூபாய் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்று வருகிறது.

இதுபோல் உ.பி.யின் தலைநகரான லக்னோவில் கோமதி ஆறு ஓடுகிறது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் இந்த நதிக்கும் அசுத்தம் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை சுத்தம் செய்வதற் காக போடப்பட்ட திட்டங்கள் மற்றும் செய்யப்பட்ட செலவி னாலும் எந்தப் பலனும் இல்லை.

இந்நிலையில் வாரணாசி மற்றும் லக்னோவில் நடை பெறும் பிரச்சாரங்களில் கங்கை, கோமதி ஆறுகள் முன்னிறுத்தப்படுகின்றன. இங்கு போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் இவ்விரு நதிகளை மையப்படுத்தி பிரச்சாம் செய்கின்றனர்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசியில் அண்மையில் பேசுகையில், “என்னை கங்கைத் தாய் அழைத்ததால் இங்கு போட்டியிடுகிறேன். குஜராத்தின் நர்மதை நதியும் அசுத்தமாகத்தான் இருந்தது. இதை கடந்த 10 ஆண்டுகளில் நான் சுத்தம் செய்து காட்டியுள்ளேன். இதைபோல், கங்கையையும் சுத்தம் செய்வேன்” என்றார்.

வாரணாசியில் மோடியின் முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் கேஜ்ரிவால், “இந்த புனித நதியை சுத்தப்படுத்த இதுவரை செலவிடப்பட்ட பணம் அனைத்தையும் இடையில் உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டனர். இவ்வாறு அரசுப் பணம் வீணாகாமல் கங்கையை சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்வேன்” என பிரச்சாரம் செய்கிறார்.

லக்னோவில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் பாலிவுட் காமெடி நடிகர் ஜாவித் ஜாப்ரி கூறுகையில், “கோமதி ஆற்றை சுத்தம் செய்வதற்காக தனியாக பணம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கோமதி ஆற்றில் நீர் சுற்றுலா தொடங்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அதை சுத்தப்படுத்தி விடலாம்” என்கிறார்.

லக்னோவின் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் கூறுகையில், “மத்திய அரசின் நிதியுதவிகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலினால், நான் முதல்வராக இருந்தபோது கோமதி ஆற்றை சுத்தம் செய்ய முடியவில்லை. அடுத்து அமையவிருக்கும் பாஜக ஆட்சியில் இந்நதியை சுத்தம் செய்வது அதன் முக்கியப் பணிகளில் ஒன்று” என்றார்.

இவ்விரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் அம்மாநில அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா, “உ.பி.யில் ஓடும் ஆறுகளை சுத்தம் செய்வதற்காக எங்கள் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி அனைத்து ஆறுகளும் சுத்தப்படுத்தப்பட்டு விடும்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x