Published : 05 Mar 2015 08:34 AM
Last Updated : 05 Mar 2015 08:34 AM

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் காரசார விவாதம்

டெல்லி பலாத்கார குற்றவாளி, பெண்களைப் பற்றி தரக்குறை வாக அளித்த பேட்டிக்கு மாநிலங்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.

டெல்லி பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்கப்பட்டதற்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் உட்பட பெண் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவை நடுவில் வந்து குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் நிலவியது.

அப்போது உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு

அனு அகா (நியமன உறுப்பினர்):

பலாத்கார குற்றவாளி பேசியிருப்பது, இந்தியாவில் உள்ள ஆண்களின் மனோ பாவத்தைதான் பிரதிபலிக்கிறது.

குற்றவாளியின் பேட்டி ஒளிபரப்பு ஆகாமல் தடுப்பது மட்டும் இதற்கு பதிலாக இருக்க முடியாது. இந்தியா வில் பெண்களை ஆண்கள் மதிப்பதில்லை. எந்த நேரத்திலும் பலாத்காரம் நடைபெறும் சூழ்நிலைதான்.

பெண்கள் சரியாக ஆடை அணிவதில்லை. ஆண்களைத் தூண்டுகிறார்கள் என்று சொல்கின்றனர். இதுபோன்ற ஆண்களின் எண்ணத்துக்கு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மீனாட்சி லெஹி (பாஜக):

அவையில் உறுப்பினர்கள் சொன்ன கருத்துகள், பேட்டியை தடை செய்வது மட்டுமல்ல சரியான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இந்தப் பேட்டியால் இந்திய சுற்றுலாத் துறை பாதிக்கப்படும். போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு செய்த அவர்கள் மீது சரியான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.என் சீமா (மார்க்சிஸ்ட்):

எம்.பி.க்களும் அமைச்சர்களும் கூட பெண்களை தரக்குறைவாக விமர்சித்து அறிக்கை வெளியிடு கின்றனர்.

இந்தப் பிரச்சினையை அவர்களுடைய கட்சி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். அசம்பாவிதம் நடக்கும் போது மட்டும் பெண் களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி விவாதிக்கிறோம். பிறகு மறந்து விடுகிறோம். நிர்பயா நிதி கடந்த 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

மாயாவதி (பகுஜன் சமாஜ் தலைவர்):

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். 10 - 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

பேட்டிக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில், பேட்டியை ஒளிபரப்ப தடை விதிக்க விரைந்து செயல்பட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் பாராட்டுகிறேன்.

ஜெயா பச்சன் (சமாஜ்வாதி):

நிர்பயா பலாத்காரம் நடந்து 3 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

பெண்களின் பாதுகாப்புக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன் (வர்த்தக அமைச்சர்):

இந்தப் பிரச்சினையில் உள்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை விரைந்து செயல்பட்டுள்ளதை வரவேற் கிறேன்.

பெண்களுக்கு எதிரான பேட்டி ஒளிபரப்பாவதைத் தடுக்க வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சி உறுப்பினர் களிடமும் ஒருமித்த உணர்வு காணப்படுகிறது. இதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.

பலாத்கார குற்றவாளி கூறியிருப்பது போல்தான் பெரும்பாலான ஆண்களின் எண்ணமும் இருக்கிறது என்பதும் உண்மை.

அம்பிகா சோனி (காங்கிரஸ்):

திஹார் சிறையில் பலாத்கார குற்றவாளியைப் பேட்டி எடுக்க எப்படி அனுமதி பெற்றனர் என்ற விவரம் தெரிய வேண்டும். (அப்போது, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதாகவும், அதற்காக பேட்டி எடுப்பதாகவும் கூறி அனுமதி பெற்றுள்ளனர் என்று அரசு தரப்பில் விளக்கம் அளித்தனர்.)

மேலும், பேட்டி எடுக்க வெளிநாட்டு தொலைக்காட்சி சேனலுக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

(அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் குறுக்கிட்டு, ‘‘காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சியின் போதுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.)

அதற்கு, இந்தப் பிரச்சி னையை அரசியலாக்க வேண்டாம் என்று அம்பிகா சோனி கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x