Last Updated : 20 Mar, 2015 01:14 PM

 

Published : 20 Mar 2015 01:14 PM
Last Updated : 20 Mar 2015 01:14 PM

கலாய்ப்பிலக்கியம்: மென்டல் மனதில் செய்யுளின் தெளிவுரை

படம்: ஓ காதல் கண்மணி

பாடல்: 'மென்டல் மனதில்...' | வீடியோ இணைப்பு - கீழே |

பாடலாசிரியர்கள்: மணி ரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்

*

லைலா... லைக்க லைக்க மை லைலா

"லைலா... விரும்ப விரும்ப என் லைலா" என்கிறான் தலைவன் (கவனிக்க like-a like-a my laila - ஆண்குரல்). அதாவது, லைலா என்ற ஃபேக்கற்ற ஒரிஜினல் ஐடி கொண்ட பெண்ணின் மொக்கைகள் உள்ளிட்ட அனைத்துப் பதிவுகளை லைக் செய்து லைக் செய்து அந்தப் பெண்ணை தன் 'லைலா'வாக பிக்கப் செய்ததை ஒற்றை வரியில் நயத்துடன் பாடலாகச் சொல்கிறான் தலைவன்.

லைக்க லைக்க யுவர் லைலா

என் போஸ்டுகளை லைக்கிட்டு லைக்கிட்டுதான் உன் லைலா ஆனேன் என்கிறாள் தலைவி. (கவனிக்க இது பெண்குரல்).

குறிப்பால் உணர்த்தும் பதம்:

இங்கே 'லைக்க' என பாடலாசிரியர்கள் எழுதியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்தச் சொல்லின் உச்சரிப்புதான் அந்தக் காரணம். ஆம், அந்தச் சொல்லை உச்சரிக்கும்போது 'லயிக்க' என்று சொல்ல வேண்டியச் சூழல் அனிச்சையாய் ஏற்படும். அதாவது, 'தலைவன் லைலா எனும் தலைவியோடு லவ்வியபடி லயித்திருக்கிறார்' என்பதைத்தான் கவிஞர்கள் நமக்கு குறிப்பால் உரைக்கிறார்கள்.

இனி அடுத்த வரிகள்...

மன மன மன மென்டல் மனதில்

லக லக லக பொல்லா வயதில்

டக டக டக கொட்டும் இசையில்

ஓகே என் கண்மணி மடியில்

தலைவனுக்கு காதல் வெற்றி. அதன் தொடர்ச்சியாக அவன் மனம் 'மென்டல்' எனும் பைத்திய நிலையை அடைகிறது. அந்த நிலையின் இயல்பு உளறுதல். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல், புரியாத மொழியில் புலம்புதல். அதுதான் 'லக லக லக' என புலம்ப வைக்கிறது. ஆனால், 'பொல்லா வயதில்' என்று இரு புலவர்களும் இங்கே குறிப்பிடுவதால், 'லக லக லக' என்பது வெறொரு பொருளைத் தந்துச் செல்கிறது. ல் + அக - லக. அதாவது அகத்தில் உள்ள லவ்வுதான் பொல்லா வயதில் வந்துத் தொலைகிறது என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

பொல்லா வயது என்றால் பொல்லாத வயது என்று அர்த்தம். ஆனால், புலவர்கள் பர்ப்பஸாகவே 'த' என்ற எழுத்தை கழட்டி விட்டுவிட்டார்கள். ஃபுல்லா அடிக்க முடியாமல், முழுசா முடிக்க முடியாமல் தவித்திடும் பருவம் அது என்பதையே பொல்லா வயதில் என உணர்த்தியிருக்கிறார்கள்.

பைத்திய மனதும் பொல்லாத வயதும் சேரும்போது 'டக டக டக' என, அதாவது எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துக்கு ஒப்பாக இச்சை வெளிப்படுவது இயல்பு. அந்த இச்சை என்பது முதல் காதலுக்குப் பொருந்தாது; அது மாற்றுக் காதலுக்கு உரியது. எனவே, அதைக் கொட்டிட வேண்டும். இச்சை என்ற சொல்லையே உச்சரிக்கக் கூடாத பருவம் என்பதால், இச்சையை இச்சை என்று சொல்லாமல், ஒரே ஒரு 'ச்'சை மட்டும் நீக்கிவிட்டு, இசையாக்கி மீட்டியிருக்கிறார்கள் இரு வல்லவர்கள்.

(இதற்கு சான்றும் விஷுவலாக பகிரப்படுகிறது. இந்தப் பாடலின் அதிகாரபூர்வ லிரிக்ஸ் சாங் வீடியோவைப் பாருங்கள். அதில் 2:53-ல் 'டக டக டக கொட்டும்' இசையில் வரும். அதற்கு காட்டப்பட்ட விஷுவல், தலைவனும் தலைவியும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்வது போன்ற படம். அவர்கள் உதட்டில் இட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால், ச்... கொட்டப்பட்டுவிட்டது.)

பைத்திய மனதும் பொல்லாத வயதும் சேர்ந்தாலும் இச்சையை அகற்றிவிட்டால், உன் கண்மணி உனக்கு ஓகே சொல்லிவிட்டு, அதற்கு அடையாளமாக உன்னை அவள் மடியில் இருத்திக்கொள்வாள் என்பதுதான் இதன் பொருள்.

இந்த நான்கு வரிகளில் மணியும் ரஹ்மானும் தமிழ்ப் பண்பாட்டுக் காதலின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் பேணிக் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

இனி....

நேற்று என்பது இன்று இல்லை

நாளை நினைப்பே ஓ தொல்லை

லைக்க லைக்க மை லைலா

லைலா

இன்று மட்டும் கிங் அண்ட் குயினா

'நேற்று உன்னுடைய ஃபிகர் இன்று வேறொருவருடையது... நாளை வரும் ஃபிகர் யாருடையதோ... எனவே, இன்று உன்னோடு இருக்கும் ஃபிகரே மகாராணி. நீதான் மகாராஜா' - இதுதான் இந்த வரிகளின் பொருள் என்பது மாதிரியான தோற்றம் இருக்கலாம். ஆனால், இங்கு தொல்லை... அதாவது துயரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. நேற்றையை துயரத்தையும் நாளையும் துயரத்தையும் மனதில் போட்டு கவலையில் ஆழ்ந்திடாமல், இன்று செழிப்புடன் இருக்கும் ராஜா - ராணியாக வாழ்க்கையை அனுபவத்திட வேண்டும் என்ற தத்துவார்த்தமாகச் சொல்கிறார்கள் 'இருவர்'. அதாவது, ஆங்கிலத்தில் 'லிவ் தி மொமன்ட்' என்பார்களே அதுபோல்.

கண்ணாலே

கிள்ளாதே

சீண்டாமல்

செல்லாதே

தொட்டாலே

துள்ளாதே

விட்டாலும்

போகாதே

கல்யாணம்

கச்சேரி

சம்சாரம்

சம்மந்தி

பெண்பிள்ளை

ஆண்பிள்ளை

அய்யய்யோ

ஓ.. மானே!

இங்கே காதல் தொடங்கி கல்யாணம் வரையிலான காலகட்டத்தில் தலைவன் - தலைவியின் வாழ்வியல் கூறுகள் அடங்கிய தன்மை பதிவு செய்யப்படுகிறது. காதல், ஊடலின் தொடர்ச்சியாக கல்யாணம் - கச்சேரி கொண்டாட்டங்களில் தொடர்வது இருவரது வாழ்க்கை. சம்சாரம் என்பது மனைவியை குறித்தாலும், சம்மந்தி என்பது குறிப்பது உறவு முறையை அல்ல. இங்கே மலையாள இலக்கியம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. மலையாளத்தில் சம்மந்தி என்றால் சட்னி என்று பொருள். எனவே, சம்சாரம் வைக்கும் சட்னியும் அமுதாகும் அழகிய வாழ்க்கைக்கு சொந்தக்காரன் ஆகிறான் தலைவன் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ குழந்தை பிறந்து, அவர்கள் வளர்ந்து அவர்கள் மென்டல் மனம் அலைபாயும்போது, நம் தலைவனும் தலைவியும் சொல்கிறார்கள்... “அய்யயோ!” என்ற அலறலுடன்.

இந்தத் தத்துவார்த்தப் பாடல் வரிகளின் கடைசி வரி 'ஓ... மானே'. இந்த ஒரு வரி மட்டும்தான் அர்த்தம் ஏதுமற்ற அழகுநயத்துக்காக போடப்பட்ட எதுகை மோனை சமாச்சாரம்.

*

பாடலாசிரியர்கள் இலக்கியக் குறிப்பு: தமிழில் புதுமைப்பித்தனை பழசாக்குவதும், திருவள்ளுவரை திடுக்கிடச் செய்வதுமான முயற்சிகளின் விளைவுதான், ஒற்றைச் சொற்களில் உலக வாழ்க்கையைப் புகுத்திட முனையும் பாடலாசிரியர்கள் மணி ரத்னம் - ரஹ்மான் ஆகியோரின் படைப்பிலக்கிய நோக்கம்.