Published : 12 Mar 2015 07:31 PM
Last Updated : 12 Mar 2015 07:31 PM

பெங்களூரில் தன் மகளை சாலையில் அடித்து உதைத்த மதுரை போலீஸ்

சர்வதேச மகளிர் தினத்தை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் கொண்டாடி வந்த நிலையில் உல்சூரில் தன் மகளை பலர் முன்னிலையில் நட்டநடுச் சாலையில் அடித்து உதைத்துள்ளார் மதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகளான சூர்யா என்ற அந்தப் பெண்ணுக்கு வயது 20-25 இருக்கலாம். ராஜாராம் தன் மகள் சூர்யாவை உல்சூரில் நடுச்சாலையில் அடித்து உதைத்ததை பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் 2 பேர் சூர்யாவுக்கு உதவி, காப்பாற்றியதோடு போலீசுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

சூர்யா ஒருவரைக் காதலிக்கிறார் என்ற வதந்தியையடுத்து "மகளுக்கு பாடம் கற்பித்ததாக" இன்ஸ்பெக்டர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் தாயார் ஒரு ஆசிரியை. இவரும் தன் மகளுக்கு உதவ முன்வரவில்லை.

பெங்களூருவில் பணியாற்றி வரும் சூர்யா, காதல் வதந்திகளை மறுத்துள்ளார்.

பெங்களூரிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்துச் சென்று அங்கு தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் உல்சூர் காவலதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே மகள் சூர்யா தன்னைக் காப்பாற்றிய இருவருடன் காரில் பதுங்கியிருந்தார்.

உல்சூர் காவலதிகாரிகள் மகள் மற்றும் பெற்றோரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

“இது ஒரு சிறிய விவகாரம், மேலும் ஒரு குடும்ப விஷயம். இது குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.” என்று உல்சூர் போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x