Published : 11 Mar 2015 10:06 AM
Last Updated : 11 Mar 2015 10:06 AM

உ.பி.யில் ‘ரிங் டோன்’ ஆக தேசிய கீதத்தை பயன்படுத்த எதிர்ப்பு

நம் நாட்டின் தேசிய கீதமான ‘ஜன கன மன..’ பாடல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைப்பேசிகளில் அழைப்பு ஒலியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உ.பி.யில் கைப்பேசி பயன்படுத்துபவர்களை அழைத்தால் அதில் தேசிய கீதம் கேட்க முடிகிறது. அந்த நபர் நம் அழைப்பை ஏற்காதபோது, 32 வினாடிகளுக்கு தேசியகீதம் ஒலித்து பாதியில் முடிகிறது. அழைப்பு ஏற்கப்படும்போது, சில வினாடிகளுக்கு தேசிய கீதம் கேட்க முடிகிறது. நம் நாட்டின் தேசிய கீதத்தை இவ்வாறு பாதியில் முடிப்பதும், கைப்பேசியில் அழைப்பு ஒலியாக பயன்படுத்துவதும் அதை அவமதிக்கும் செயல் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி அலிகர் நகர தொண்டு நிறுவனங்கள் பொதுநல வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து அலிகர் நகரைச் சேர்ந்த தொண்டு நிறுவன நிர்வாகி முகேஷ்சிங் செய்னி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த ஜனவரி 26-ம் தேதி முதல் இந்தப் பாடலை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 52 வினாடிகள் பாடப்படும் பாடல், கைப்பேசி அழைப்பில் 32 வினாடிகளுடன் பாதியில் முடிகிறது. இந்தப் பாடலை கேட்டவுடன் எழுந்துநின்று தேசத்துக்கு மரியாதை செலுத்துவது மக்களின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இதன் கௌரவத்தை குலைக்கும் வகையில் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

எனவே இதை உடனே தடுத்து நிறுத்தும்படியும், இதை அறிமுகப்படுத்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் பொதுநல வழக்கு தொடுக்க உள்ளோம். இந்தப் பாடல் உ.பி.யில் மட்டுமா அல்லது நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை என்றார்.

நாடு முழுவதும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளின் முடிவில், தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். வேறு எந்த சூழலிலும் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. தேசிய கீதத்துக்கு எந்த அவமதிப்பும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இதற்கு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x