Published : 14 Mar 2015 09:57 AM
Last Updated : 14 Mar 2015 09:57 AM

பேனர் கண்காணிப்பு குழுவினர் ஆலோசனை

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை (பேனர்கள்) கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2014 டிசம்பரில் உத்தரவிட்டது.

அதன்படி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் எ.எஸ்.ஜீவரத்தினம், பி.ஏகாம்பரம் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிப்ரவரி 9-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவின் செயல்பாட்டுக்கு சென்னை மாநகராட்சி ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த குழுவின் முதல் கூட்டம் நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளை அகற்றுவது, அதுகுறித்த விதிமுறைகளை ஆய்வு செய்வது போன்ற பணிகளை இந்த குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x