Published : 11 Feb 2015 11:34 AM
Last Updated : 11 Feb 2015 11:34 AM

வெங்கய்ய நாயுடுவுடன் கேஜ்ரிவால் சந்திப்பு: டெல்லிக்கு மாநில அந்தஸ்து உட்பட மத்திய அரசிடம் 4 கோரிக்கைகள்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லியில் இன்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்தார்.

கேஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மி தலைவர் மனிஷ் சிசோதியாவும் சென்றிருந்தார்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறுவது, உட்கட்டமைப்பு விசயங்களை மேம்படுத்துவது, சட்டவிரோத காலனி குடியிருப்புகள் விவகாரம் ஆகியன குறித்து வெங்கய்ய நாயுடுவுடன் கேஜ்ரிவால் ஆலோசித்தார்.

ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதை குறிப்பிட்டிருந்தது. எனவே இன்றைய சந்திப்பின்போது டெல்லிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான பேச்சுவார்த்தை முக்கிய இடம் பெற்றதாகத் தெரிகிறது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிசோதியா, "அமைச்சரிடம் நாங்கள் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். முதலில், ஏழைகளுக்கு நிவாரணத் தொகை அளிப்பது தொடர்பாக பேசினோம். இதில் மத்திய அரசின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. எனவே இதை திறம்பட செய்து முடிக்க டெல்லி மேம்பாட்டுக் கழகம், மத்திய அரசு உதவுமாறு வேண்டினோம்.

இரண்டாவதாக பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பார்கிங் ஏரியா அமைக்க நிலம் தேவைப்படுகிறது. எனவே எங்கெல்லாம் காலி நிலம் இருக்கிறதோ அவற்றை டெல்லி மேம்பாட்டுக் கழகம் டெல்லி அரசுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

அதுதவிர டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். எங்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அமைச்சர் கட்சி பாகுபாடின்றி எங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார். கேஜ்ரிவால் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்" என்றார்.

மாநில அரசுக்கு ஒத்துழைப்போம்:

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "தேர்தல் வெற்றிக்காக கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் முன் இருக்கும் பெரும் பொறுப்பை எடுத்துரைத்தேன்.

டெல்லியில் சட்டவிரோத காலனி குடியிருப்புகளை சீர்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டேன். டெல்லி மாநில அரசுடன் ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

ஆனால் மாநில அரசின் செயல்பாடுகளைப் பொருத்தே மத்திய அரசின் ஒத்துழைப்பு இருக்கும் என்பதை எடுத்துரைத்தேன். நீங்கள் சரியாக நடந்து கொண்டால் எங்கள் ஒத்துழைப்புக்கு குறைவிருக்காது எனக் கூறினேன்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் என்னால் பங்கேற்க முடியாது என்பதை தெரிவித்தேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x