Last Updated : 15 Feb, 2015 09:21 AM

 

Published : 15 Feb 2015 09:21 AM
Last Updated : 15 Feb 2015 09:21 AM

கேஜ்ரிவால் கடந்து வந்த பாதை...

ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டம் ஷிவானியில் 1968 ஆகஸ்ட் 16-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் பிறந்தார். இவரது தந்தை கோவிந்த்ராம் கேஜ்ரிவால் பிர்லா. மின்னியல் பொறியாளரான அவர் அரசு ஊழியராகப் பணி யாற்றினார். தாயார் கீதா தேவி.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு 1985-ல் கரக்பூர் ஐஐடியில் கேஜ்ரிவால் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் 1989-ல் ஜம்ஷெட்பூர் டாடா ஸ்டீல் நிறு வனத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். 1995-ல் மத்திய அரசின் ஐ.ஆர்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். இதன் பயிற்சிக்காக முசோரியில் இருந்தபோது ஐ.ஆர்.எஸ். பயின்ற தனது வகுப்பு தோழியான சுனிதா என்பவரை திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் புல்கித் பள்ளியில் படிக்கிறார். மகள் ஹர்ஷிதா கான்பூர் ஐஐடியில் பயின்று வருகிறார். காஜியாபாத் கொசாம்பி பகுதியின் அடுக்கு மாடி குடியிருப்பில் கேஜ்ரிவால் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஐ.ஆர்.எஸ். தேர்வுக்காக 1992-ல் கொல்கத்தாவில் சில மாதங்கள் தங்கிப் படித்தபோது அன்னை தெரசாவின் பொதுநல பணிகளும், ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்றதன் காரணமாக தன்னார்வ தொண்டு பணியின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. இதற்காக 1999-ம் ஆண்டில் இரு ஆண்டுகள் விடுப்பு எடுத்தவர், ‘பரிவர்தன் (மாற்றம்)’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி டெல்லிவாசிகளுக்கு உணவுப் பொருள் விநியோகம், வருமான வரி கட்டுதல் மற்றும் மின்சாரப் பிரச்சினை ஆகியவற்றுக்காக பணியாற்றினார்.

2000-ம் ஆண்டில் மீண்டும் பணியில் சேர்ந்த கேஜ்ரிவாலுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆர்வம் வளர்ந்தது. அந்த சட்டத்தின் முக்கிய கூறுகளை வகுத்ததற்காக கேஜ்ரிவாலுக்கு 2006-ல் ராமோன் மாகாசேசே விருது வழங்கப்பட்டது.

அரசுப் பணி ராஜினாமா

இதன் பிறகு முழுநேர தொண்டுப் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தார். தகவல் அறியும் உரிமை சட்டத் தின் அடிப்படையில் பல அரசு துறைகளில் மனு செய்து பல்வேறு ஊழல்களை வெளிக் கொண்டு வந்தார். இந்தவகையில் டெல்லியில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்ததை 2008-ல் தகவல் அறியும் சட்டம் மூலமாக வெளிக்கொண்டு வந்த பின் மேலும் புகழ் அடைந்தார். சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சட்டத்துக்கு புறம்பாக மிகக் குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விஷயமும் கேஜ்ரிவால் மூலம் வெளியானது.

சமூகப் போராட்டம்

இதன் பிறகு 2011-ல் லோக்பால் மசோதாவுக்காக டெல்லியில் உண்ணாவிரதம் தொடங்கிய அண்ணா ஹசாரேவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டார். இவருடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட் டோர் இணைந்தனர். அவர்கள் ஆதரவுடன் தனது பரிவர்தன் அமைப்பின் மூலமாக சமூக பணி களை கேஜ்ரிவால் தொடர்ந்தார்.

அப்போது டெல்லியில் இருந்த மின்சார மீட்டர்களின் கோளாறு காரணமாக பலருக்கும் மின்கட்டணத் தொகை, பல ஆயிரம் ரூபாய் வந்தது. இதில், மீட்டரை சரி செய்யாமல் முதலில் மின்தொகை கட்ட வேண்டும் என அரசு வலியுறுத்தியதை எதிர்த்து போராடினார். மாகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் போல் மீட்டர்களை சரிபார்க்கும் வரை மின்கட்டணம் கட்ட முடியாது என பொதுமக்கள் சார்பில் அறிவித்தார். இதனால் வீடுகளில் அரசு துண்டிக்கும் மின்சார இணைப்பை தானே மின்கம்பங்கள் மீது ஏறி மீண்டும் இணைத்து போராட்டம் நடத்தினார். மிகவும் பரபரப்பான இந்த போராட்டம் பொதுமக்கள் இடையே கேஜ்ரிவாலை மேலும் பிரபலப்படுத்தியது.

அப்போது பொதுஇடங்களில், ஆளும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கேஜ்ரிவால் வைத்த கடுமையான விமர்சனத்தை தாங்க முடியாமல் அன்றைய மத்திய அமைச்சர் கபில்சிபல், ‘உங்களால் முடிந்தால் அரசியலில் குதித்து மக்கள் பணியாற்ற வேண்டும்’ என கேஜ்ரிவாலுக்கு சவால் விட்டார். இதை ஏற்றுக் கொண்ட கேஜ்ரிவால், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2012 ல் ‘ஆம் ஆத்மி (சாமானிய மனிதன்)’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக போட்டி யிட்ட கட்சிக்கு 28 இடங்கள் கிடைத்தன.

இந்த தேர்தல் பிரச் சாரத்தில் கேஜ்ரிவாலை கடுமை யாக விமர்சனம் செய்த காங்கிரஸ் அவரை ஆட்சியில் அமர்த்த வேண்டிய கட்டாயத்திற் குள்ளானது. இதனால் 2013 டிசம்பர் 28-ல் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார். சட்டப்பேரவையில் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாமல், 49 நாட்களுக்கு பின் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இன்று அதே நாளில் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x