Published : 23 Apr 2014 08:41 AM
Last Updated : 23 Apr 2014 08:41 AM

காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா?: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது, காளைகள் எந்த அளவு துன்பத்தை அனுபவிக்கின்றன என்று ஆய்வு எதுவும் நடத்தி இருக்கிறீர்களா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரும் வழக்கின் விசா ரணை, உச்சநீதிமன்ற அமர்வு முன்னிலையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

“ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது, காளைகள் எந்த அளவு துன்பத்தை அனுபவிக்கின்றன என்று ஆய்வு எதுவும் நடத்தி இருக்கிறீர்களா?” என்று நீதிபதி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “பொழுதுபோக்கிற்கு காளைகள் துன்புறுத்துவது முற்றிலும் தடுக் கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துக்கு பயன்படுத்தும்போது காளைகள் சிறிய சிரமத்தைச் சந்திப்பதுபோல், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும் நடக்கிறது. காளை சண்டை எதுவும் நடத்தப் படுவதில்லை,” என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விலங்குகள் நல அமைப்பு வழக்கறிஞர் பஞ்ச்வானி, “காளைகள் இடையே சண்டை நடப்பதில்லை. ஆனால், காளை களுடன் மனிதர்கள் சண்டை போடுகின்றனர்,” என்றார்.

அப்போது நீதிபதி ராதா கிருஷ்ணன், “தமிழக அரசு 2009-ம் ஆண்டு விதித்த கட்டுப்பாடுகள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்படுகின்றன என்று எங்களுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் அரசின் அதிகாரிகள்தான் இந்த அறிக்கையை அளித்துள்ளனர்,” என்றார்.

“அந்த அறிக்கைக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை” என்று வழக்கறிஞர் ராகேஷ் திவேதி மறுத்தார். உடனே நீதிபதி ராதா கிருஷ்ணன், “அப்படி யென்றால் நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்” என்றார்.

தொடர்ந்து வாதிட்ட ராகேஷ் திவேதி, “உச்சநீதிமன்ற கட்டுப் பாடுகளுக்குப் பின் காளைகள் காயமடைவது குறைந் துள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து அமல்படுத்தவும் தமிழக அரசு தயாராக உள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது” என்றார்.

ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பாலி, “ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் காளைகள் அதற்கென பயிற்சி பெற்ற சிறப்பு ரக காளைகள். அவற்றை பாதுகாக்கவே இந்த வீர விளையாட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால், இந்த காளைகள் கசாப்பு கடை களுக்கு சென்று விடும்” என்றார்.

இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x