Published : 10 Feb 2015 02:52 PM
Last Updated : 10 Feb 2015 02:52 PM

ஞான பீட விருதுபெற்ற நெமதேவின் கருத்துக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

சல்மான் ருஷ்டியின் எழுத்துக்கள் இலக்கியம் இல்லை என்றுகூறிய ஞானபீட விருதுபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மராத்தி எழுத்தாளர் பாலச்சந்திர நெமதேவின் கருத்துக்கு ருஷ்டி பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பையில் கடந்த வெள்ளியன்று மாத்ரூபாஷா சம்வர்த்தான் சபா சார்பாக பாலச்சந்திர நெமதேவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ருஷ்டியும் வி.எஸ்.நைபாலும் மேற்கிற்கு துணைபோகக்கூடியவர்கள், குறிப்பாக ருஷ்டி எழுதிய 'மிட்நைட் சில்ட்ரன்' நாவல் இலக்கிய தகுதியற்றது.

அறிமுகமான ஒரு படைப்பாளி தன்னை ஒரு மண்ணின் மைந்தனாக வழிமொழிந்துகொண்டு, சொந்த மொழியில் எழுதவேண்டும். தனது எழுத்தில் உலகமயமாக்கலைக் குறைத்துக்கொண்டு அதேநேரம் ஒரு உலகப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் ஒரு கொலையாளி மொழி. தொடக்கக் கல்வியும், இடைநிலைக் கல்வியும் தாய் மொழியில்தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் என்ன சிறப்பு இருக்கிறது? அந்த மொழியில் ஒரு சிறு காவியம்கூட இல்லை. எங்களிடம் மஹாபாரதத்தில் மட்டுமே 10 காவியங்கள் உள்ளன. ஆங்கிலக் கல்வியை கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என்று அவர் பாராட்டு விழாவில் தெரிவித்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடியாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில்,

''பண்பற்ற பேச்சு. பரிசைப்பெற்றுக்கொண்டு நன்றி சொல்வதுதான் அழகு. எனக்கு என்ன ஐயம் என்றால் இந்தப் படைப்புகளையெல்லாம் படிக்காமலேயே தாக்குதலில் இறங்கிவீட்டீர்களோ என்பதுதான்.'' என்று தெரிவித்துள்ளார்.

நெமதே ஆர்வம் காரணமாக தானே ஆங்கிலத்தை விரும்பிக் கற்றவர். மேலும் ஆங்கில ஒப்பிலக்கியங்களை வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப்பாடத்திற்கான குருடியோ தாகூர் இருக்கையிலிருந்து ஓய்வுபெற்றவர்.

நெமதே எழுதிய கோசலா (கூட்டுப்புழு) எனப்படும் நாவல் 1963ல் மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'கோசலா'வின் தொடர்ச்சியாக 2010ல் அவருடைய 'ஹிந்து' நாவல் வெளிவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x