Last Updated : 26 Feb, 2015 12:58 PM

 

Published : 26 Feb 2015 12:58 PM
Last Updated : 26 Feb 2015 12:58 PM

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ஆதரித்து பாவத்தை தேடிக் கொள்ள போவதில்லை: சிவசேனா

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை படு கொடூரமான சட்டமென்று விமர்சித்துள்ள சிவசேனா அந்தச் சட்டத்தை ஆதரித்து விவசாயிகளின் பாவத்தை எந்த நாளும் தேடிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், "நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை கொண்டு வந்து மக்கள் அனைவரையும் மத்திய அரசு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இந்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தை நாங்கள் பாரபட்சமின்றி எதிர்க்கிறோம். இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவிபுரிய நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த செயல் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக மத்திய அரசு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் நிலையில் உள்ளது.

ஏற்கெனவே விவசாயிகள் கடுமையான கடன் தொல்லையில் தவிக்கின்றனர். அவர்களுக்கு நன்மை தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசு, அவர்களின் நிலங்களை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறது.

விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை ஆதரித்து பாவத்தை செய்ய விரும்பவில்லை. ஆட்சிக்கு வந்ததற்கு விவசாயிகளுக்கு அளிக்கும் பரிசு இத்தகையதாக இருக்கக் கூடாது. இதனை சிவசேனா கடுமையாக எதிர்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x