Last Updated : 21 Feb, 2015 07:17 PM

 

Published : 21 Feb 2015 07:17 PM
Last Updated : 21 Feb 2015 07:17 PM

ஆவணங்கள் விவகாரம்: நிறுவன உயரதிகாரிகள் 5 பேருக்கும் 3 நாட்கள் விசாரணைக் காவல்

பெட்ரோலிய அமைச்சக ரகசிய ஆவணங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக 5 கார்ப்பரேட் நிறுவன உயரதிகாரிகளை பிப்.24-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 5 கார்ப்பரேட் உயரதிகாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்த டெல்லி போலீஸ், இந்த 5 உயரதிகாரிகளிடமிருந்தும் கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் "தேசிய பாதுகாப்பு விவகாரம்" தொடர்பானது என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து 5 கார்ப்பரேட் உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டு டெல்லி மாநகர மேஜிஸ்ட்ரேட் சஞ்சய் கனக்வால் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை பிப்.24ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

"இந்த விவகாரத்தில் தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதிகாரபூர்வ ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு இப்போது வந்துள்ளது.” என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேர் விவரம் வருமாறு:

ஷைலேஷ் சக்சேனா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கார்ப்பரேட் மேலாளர்.

வினய் குமார், எஸ்ஸார் நிறுவனத்தின் டி.ஜி.எம்.

கே.கே.நாயக், கெய்ர்ன் இந்தியா, ஜி.எம்.

சந்திரா, ஜூபிலண்ட் எனெர்ஜி, மூத்த அதிகாரி

ரிஷி ஆனந்த், ரிலையன்ஸ் ADAG, டி.ஜி.எம்.

இந்த 5 பேர் சார்பாகவும் ஆஜரான வழக்கறிஞர் இவர்களை போலீஸ் காவலில் பிப்.24ஆம் தேதி வரை வைத்து விசாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த 5 பேரையும் சேர்த்து அரசு ஆவணங்கள் மாயம் தொடர்பாக கைதானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஜூபிலண்ட் எரிசக்தி நிறுவனத்தின் நொய்டா அலுவலகத்தில் சோதனை:

மிகப்பெரிய கார்ப்பரேட் சதியாக உருவெடுத்த இந்த ஆவணங்கள் மாய விவகாரத்தில் ஜூபிளண்ட் நிறுவனத்தின் எரிசக்தி ஆலோசகர் பிரயாஸ் ஜெயின் கைது செய்யப்பட்ட பிறகு அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நொய்டாவில் உள்ள அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி கூறும் போது, “விசாரணை நடைமுறைகளுக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. இன்னும் சில சோதனைகள் நடைபெறும், விஷயத்தின் அடி ஆழம் வரை செல்வதே எங்கள் நோக்கம்.

எவ்வளவு நாட்களாக இது நடைபெற்று வருகிறது? இதனால் பயனடைபவர்கள் யார் யார்? போன்ற விவரங்கள் இந்த வழக்கில் முக்கியம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x