Published : 06 Feb 2015 12:26 pm

Updated : 06 Feb 2015 12:27 pm

 

Published : 06 Feb 2015 12:26 PM
Last Updated : 06 Feb 2015 12:27 PM

மதுரையை புதுசாக்கும் இளைஞர் படை

முந்நூறு இளைஞர்கள் “வா நண்பா” என்ற இரண்டே வார்த்தையில் ஓரிடத்தில் அணி திரள்கிறார்கள். அரசு இயந்திரங்களால் ஆண்டுக்கணக்கில் கவனிக்கப்படாத பிரச்சினைகளை அரை மணி நேரத்தில் முடித்துவிடுகிறது இந்த இளைஞர் படை.

1981 உலகத் தமிழ் மாநாட்டின்போது, மதுரையில் நிறுவப்பட்ட தமிழறிஞர் சிலைகள் நீண்டகாலமாக அழுக்கடைந்து, புதர் மண்டிக்கிடந்தன. சிலைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ‘சிலைகளை மாநகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டோம்’ என்று பதிலளித்தது தமிழ் வளர்ச்சித்துறை. மாநகராட்சியோ, ‘இல்லவே இல்லை இன்னமும் தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்றது.

இது எங்கள் வேலை!

‘வா நண்பா! இந்த ஞாயிறு சிலைகளைச் சுத்தம் செய்வோம்’ என்று இந்த இளைஞர்கள் களமிறங்கியதும், அவசரமாக ஆவணங்களைத் தேடிய மாநகராட்சி நிர்வாகம் பழைய காகிதம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘ஆமாம் தமிழ் வளர்ச்சித்துறை சிலைகளை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துள்ளது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் இவர்களோடு சேர்ந்துகொண்டது. இப்போது மதுரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகள் எல்லாம் சுத்தமாக, புது வர்ணம் பூசப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றன.

‘வா நண்பா! இந்த ஞாயிறு சிலைகளைச் சுத்தம் செய்வோம்’ என்று இந்த இளைஞர்கள் களமிறங்கியதும், அவசரமாக ஆவணங்களைத் தேடிய மாநகராட்சி நிர்வாகம் பழைய காகிதம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘ஆமாம் தமிழ் வளர்ச்சித்துறை சிலைகளை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துள்ளது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் இவர்களோடு சேர்ந்துகொண்டது. இப்போது மதுரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகள் எல்லாம் சுத்தமாக, புது வர்ணம் பூசப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றன.

“சாதி மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத் தானே கடந்த தலைமுறை ஆட்கள் இந்தச் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். அப்படியானால் சிலைகளை நாங்கள் தானே பராமரிக்க வேண்டும்” என்று ரொம்ப எளிமையாகப் பதில் சொல்கிறார் ‘வா நண்பா’ குழுவின் செயலாளர் எம்.சி.சரவணன்.

வெறும் விளையாட்டல்ல

இந்த இளைஞர் குழு உருவானது எப்படி என்று கேட்டபோது, ரகுமான், காளி, சுந்தர் ஆகிய மூவரையும் ஒரு ஜிம்மில் பார்த்து பரிச்சயம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஞாயிறுதோறும் கிரிக்கெட், வாலிபால் விளையாடுவதற்காக ஒன்றுகூடியதாகவும் சரவணன் கூறினார். ஒரு கட்டத்தில், விளையாட்டுக்குப் பதில் தங்கள் உடல் உழைப்பு மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியுள்ளது. பூங்காக்களைச் சுத்தம் செய்வது, மரம் நடுவது என்று இறங்கினார்கள். அந்தப் பணி பிடித்திருந்ததால், புதிய நண்பர்களும், நண்பர்களின் நண்பர்களும் இவர்களோடு சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். “இங்கே தலைவர், செயலாளர் பதவி எல்லாம் சும்மா பெயருக்குத் தான். உறுப்பினர்களின் தன்னலமற்ற உழைப்புதான் பெரிது” என்கிறார் சரவணன்.

குப்பை போச்சு, மரம் வந்தாச்சு

மதுரை மாநகரில் கவனிக்கப்படாத குப்பைகளோ, புதர்களோ இருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே மரக்கன்றுகளை ‘வா நண்பா’ குழுவினர் நடுகிறார்கள். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் கடைக்காரர்களிடமும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவர்கள் தவறுவதில்லை. இதனால் அந்த இடத்தைத் தொடர்ந்து பராமரித்து, மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளைப் பொதுமக்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எறும்புக் கூட்டம் போலச் சுறுசுறுப்பாக இவர்கள் செய்யும் வேலையால், ஒவ்வொரு வாரமும் மதுரையின் அவலங்களில் ஒன்று நீங்குகிறது. அன்னை சத்யா அரசு ஆதரவற்றோர் இல்லம், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தியாகராசர் பள்ளி, மதுரை மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரேஸ்கோர்ஸ் சாலை, பூங்காக்கள் போன்றவற்றின் தோற்றத்தையே இந்தக் குழுவினர் மாற்றிவிட்டார்கள்.

நாங்களும் வரலாமா?

ஒவ்வொரு வாரமும் குறைந்தது 15 கல்லூரி மாணவர்கள் புதிதாகச் சேருகிறார்கள். தாங்களும் வரலாமா என்று பொதுஜனங்களும் கேட்கிறார்கள். துடிதுடிப்பான இந்தக் கூட்டத்துக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்ன வேலை கொடுக்கலாம் என்று யோசிப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. “வெள்ளிக்கிழமைக்குள் இடத்தை முடிவு செய்து, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், பேஸ்புக் வழியாகத் தகவலைத் தட்டிவிட்டால் போதும், மற்றதை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் குழுத் தலைவர் ரகுமான்.

இக்குழுவில் ஒருவரான அமெரிக்கன் கல்லூரி மாணவர் சிராஜ்தீன், “முன்னாடி எல்லாம் சண்டேன்னா பேஸ்புக், ட்விட்டர்தான் பொழுதுபோக்கு. ‘வா நண்பா’ பற்றி பேஸ்புக் மூலமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களோடு சேர்ந்து வேலை பார்க்கிறது மனசுக்குச் சந்தோஷமாகவும், உடலுக்கு எனர்ஜியாவும் இருக்கு” என்றார்.

முதல் நாளில் குப்பையைச் சுத்தம் செய்யத் தயங்கிய சேது பொறியியல் கல்லூரி மாணவர் சிவராமகிருஷ்ணன், மற்றப் பசங்க எல்லாம் ஜாலியா வேலை செய்றதைப் பார்த்துத் தானும் உற்சாகத்துடன் வேலை செய்துள்ளார். ‘அந்த இடம் சுத்தமான பிறகு பார்க்கப் பார்க்க ஆசையா இருந்துச்சு. பெருசா சாதிச்ச மாதிரியான பீல் வந்துச்சு’ என்று சொன்ன அவர் “தொடர்ந்து 5 மாசமா வாரந்தோறும் போய்கிட்டு இருக்கேன். என் கிளாஸ் மேட்ஸ் 10 பேரும் வர ஆரம்பிச்சிருக்காங்க” என்கிறார்.

இவர்களின் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட வனத்துறை இலவச மரக்கன்றுகளையும், மாநகராட்சி நிர்வாகம் குப்பை அள்ள வாகன உதவியையும் வழங்க முன்வந்திருக்கின்றன.

இளைஞர் படைவா நண்பாஇளைஞர் குழுசமூக சேவை

You May Like

More From This Category

More From this Author