Published : 25 Feb 2015 04:23 PM
Last Updated : 25 Feb 2015 06:56 PM
ரயில்வே பட்ஜெட் 2015-16, சலுகைகள் நிறைந்ததாக இருப்பதைக் காட்டிலும், அத்துறையின் வருவாயை உயர்த்தும் வகையிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரயில்வே துறையின் வருவாயைப் பெருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமையும், மக்களின் வசதிகள் சார்ந்த திட்டங்கள் இரண்டாம் பட்ச முக்கியத்துவமும் தரப்படலாம் என்று அவர்கள் கருதுகின்றன.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாளை (புதன்கிழமை) தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரயில்வே நிதி நிலைமை மோசமாக இருக்கும் இக்கட்டான சூழலில், இந்த பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்புகள், பயணிகளுக்கான சலுகைகளை தருவதைவிட, நிதி மேம்பாட்டுக் கொள்கைகள் கொண்டதாகவே இருக்கும் என பட்ஜெட் நோக்கர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கலாம் என்கிறது நிபுணர்கள் கணிப்பு.
மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். ஆனால், நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நிர்பந்தத்தில் பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, சில கெடுபிடிகளை முன்வைப்பார்.
பயணிகள் ரயில் சேவைக்கான மானியங்களை குறைத்து, சரக்கு ரயில் சேவை வாயிலான வருமானத்தை உயர்த்துவதே சுரேஷ் பிரபுவின் முக்கிய இலக்காக இருக்கும். இதற்காக ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம், உயர்த்தப்படாமலும் இருக்கலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இருந்ததில்லை. அதன்பிறகு 2012-13 நிதியாண்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. பரவலாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக இரண்டாம் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டண உயர்வு சற்று தளர்த்திக் கொள்ளப்பட்டது.
ஆனால், அதன் பிறகு ரயில் கட்டண நிர்ணய கொள்கை அடிப்படையில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் பயணிகள் ரயில் கட்டணம் 14.2% வரையிலும், சரக்கு ரயில் கட்டணம் 6.5% வரையிலும் உயர்த்தப்பட்டது கவனிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தால் டீசல் கட்டணம் குறைந்திருப்பதால் ரயில் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகிறது.
கோரிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், ரயில்வே துறையின் மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாக இருப்பதால். அதை ஈடு செய்யும் வகையில் முன்னர் ஏற்றப்பட்ட ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், நிதி மேலான்மையில் ஒரு சீர்திருத்தவாதியாக பார்க்கப்படும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே துறையின் தேங்கிக் கிடக்கும் திட்டங்களை முடிக்கும் வகையில் தனியார் பங்களிப்பை வெகுவாக ஊக்குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
நிதி நெருக்கடி காரணமாக புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் இடம் பெறாது. மிக முக்கியமான தடங்களில் புதிய ரயில் இருப்புப் பாதைகள் அமைப்பது, மின்மயமாக்குவது போன்ற ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே இருக்கும். இவ்வாறு பட்ஜெட் நோக்கர்கள் தங்கள் கணிப்பை தெரிவித்துள்ளனர்.