

புலந்த்சாகர்: உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு ஜீது சைனி என்பவரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சைனியின் முகத்தில் அவரது நண்பர்கள் சிலர் கேக் பூசியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து புலந்த்சாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தரிக்ஷ் ஜெயின் கூறும்போது, "துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் கிடைத்ததும் குர்ஜா நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 இளைஞர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் ஒருவரது பிறந்த நாளின் போது கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில சந்தேக நபர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.